Thursday 16 August 2018

போற்றத்தக்க ஒரு தலைவர்.. வாஜ்பாய்!

மறைந்து விட்டார் வாஜ்பாய்... கடந்த ஒன்பது வாரங்களாக டில்லியின் அகில இந்திய மருத்துவ கழக மருத்துவ மனையில் (All India Institute of Medical Sciences or AIIMS) சிகிச்சை பெற்று வந்தார் வாஜ்பாய். கடந்த ஜூன் 11, 2018 முதல் AIMS மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், வயோதிகத்தின் காரணமாக வரும் பிரச்சனைகள் காரணமாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


வாஜ்பாய்க்கு 2001 ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 2009 ல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே வாஜ்பாயின் இரண்டு சிறு நீரகங்களில் ஒன்று மட்டும் தான் செயற்பட்டு வந்திருக்கிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஞாபக மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டிருந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.


40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.

1999 – 2004 ஆட்சியில் 24 கட்சிகளை வைத்து நாட்டை ஆண்டவர் வாஜ்பாய். இது ஒரு மிகப் பெரும் சாதனைதான். இதற்கு முக்கிய காரணம், எல்லோரையும் அரவணைத்து செல்லும் வல்லமை, ஆங்கிலத்தில் சொன்னால் Inclusiveness, வாஜ்பாய்க்கு இருந்தது. ஆனால் என்னதான் இந்த Inclusiveness வாஜ்பாய் க்கு இருந்தாலும், அவர் ஒரு ஆர்எஸ்எஸ் காரர்தான். இதனை வாஜ்பேய் ஒரு கட்டத்தில், 2003 ல் இப்படி சொன்னார்; “Sangh (RSS) is my soul) அதாவது ஆர்எஸ்எஸ் தான் என்னுடைய ஆன்மா.


பிரதமர் இந்திரா காந்தி 1975 – 1977 காலகட்டத்தில் வாஜ்பாயை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். 1977 தேர்தலில் வென்று மந்திரி ஆனார். ஆனால் தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு இந்திரா காந்தி மீது எந்த கோபமும் இல்லை. 1980 ஜூன் 23 ல் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த போது, அந்த செய்தி அறிந்த அடுத்த பத்து நிமிடத்தில் வாஜ்பாய் இந்திரா காந்தி யின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார்.

மூன்று முறை பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பாய். 1996ல் வெறும் 13 ம் நாட்கள் மட்டும் பிரதமராக இருந்தார். பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்த காரணத்தால், வாக்கெடுப்புக்கு போகாமலேயே அவரே ராஜினாமா செய்து விட்டு சென்றார். இரண்டாவது தடவை 14 மாதங்கள், பிப்ரவரி, 1998 முதல் ஏப்ரல் 17, 1999 வரையில் பிரதமராக இருந்தார். பின்னர், 1999 செப்டம்பர் முதல் மே, 2004 வரையில் பிரதமராக இருந்தார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் 2002 மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்தன. அப்போது மோடி குஜராத்தின் முதலமைச்சர். நேரில் சென்று குஜராத் நிலவரத்தை பார்த்த பின்னர் வாஜ்பாய் சொன்ன கருத்து, குஜராத்தை ஆள்பவர்களுக்கு (மோடி) ராஜதர்மா வேண்டும் என்பதுதான். '’இந்த படுகொலைகளுக்கு பிறகு நான் எந்த முகத்துடன் வெளி நாடுகளுக்கு செல்லுவேன்’’ என்று வெளிப்படையாகவே வாஜ்பாய் ஒரு முறை கூறினார்.

வாஜ்பாய் மென்மையானவர், மோடி கடினமானவர் என்றெல்லாம் ஒரு கால கட்டத்தில் விமர்சனங்கள் வந்தபோது, பாஜக வில் இருந்து பின்னர் ஓரங்கட்டப்பட்ட கோவிந்தாச்சரியா சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தை, '’வாஜ்பாய் ஆர்எஸ்எஸி ன் முகோடா’’ '’முகோடா’’ என்ற ஹிந்தி வார்த்தையின் பொருள் 'முகமூடி’. அதாவது தாய் ஸ்தாபனம், தனக்கு தோதான நேரங்களில் மென்மையான வாஜ்பாயை பயன்படுத்தும், கடினமான நேரங்களில் மோடியை பயன்படுத்தும். இந்த இடத்தில் மோடியின் '’கல்யாண’ குணங்களை’’ எவரும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாஜ்பாய் நல்லவர். ஆனால் அவர் சார்ந்திருக்கும் பாஜக தான் அபாயகரமான கட்சி என்று இந்தியா வின் பெரும்பாலான பிராந்திய கட்சிகள் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் “Right man in the wrong party” என்று சொல்லுவார்கள். இதற்கு வாஜ்பாய் அழகாக ஒரு பதிலடி கொடுத்தார். '’ஒரு பழம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பழத்தை கொடுத்த மரம் தவறானதாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதெப்படி சாத்தியமாகும்?’’.


இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த வாஜ்பாய் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூருக்கு அவர் பஸ் பயணம் மேற்கொண்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் கார்கில் யுத்தம் வெடித்தது. இருந்த போதிலும் அவர் பிரதமராக இருந்த காலம் முழுவதும் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த அவர் பெரு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். லாகூர் பஸ் பயணம் பாகிஸ்தானில் நூழைந்த போது வாஜ்பாய் சொன்னார்; '’என் பக்கத்து வீட்டுக்காரர் சந்தஷோமாக, நிம்மதியாக இல்லை என்றால் நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்’’. இதனை விட பேருண்மை வேறென்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை.
 வாஜ்பாய் என்றும் போற்றத் தகுந்த ஒரு தலைவர்தான். வாஜ்பாய் நலம் பெற்று மீண்டும் அவர் வீடு திரும்ப வேண்டும் என்று இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் விரும்பியது. ஆனால் அது ஈடேறவில்லை.