Thursday, 16 August 2018

போற்றத்தக்க ஒரு தலைவர்.. வாஜ்பாய்!

மறைந்து விட்டார் வாஜ்பாய்... கடந்த ஒன்பது வாரங்களாக டில்லியின் அகில இந்திய மருத்துவ கழக மருத்துவ மனையில் (All India Institute of Medical Sciences or AIIMS) சிகிச்சை பெற்று வந்தார் வாஜ்பாய். கடந்த ஜூன் 11, 2018 முதல் AIMS மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், வயோதிகத்தின் காரணமாக வரும் பிரச்சனைகள் காரணமாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


வாஜ்பாய்க்கு 2001 ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 2009 ல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே வாஜ்பாயின் இரண்டு சிறு நீரகங்களில் ஒன்று மட்டும் தான் செயற்பட்டு வந்திருக்கிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஞாபக மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டிருந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.


40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.

1999 – 2004 ஆட்சியில் 24 கட்சிகளை வைத்து நாட்டை ஆண்டவர் வாஜ்பாய். இது ஒரு மிகப் பெரும் சாதனைதான். இதற்கு முக்கிய காரணம், எல்லோரையும் அரவணைத்து செல்லும் வல்லமை, ஆங்கிலத்தில் சொன்னால் Inclusiveness, வாஜ்பாய்க்கு இருந்தது. ஆனால் என்னதான் இந்த Inclusiveness வாஜ்பாய் க்கு இருந்தாலும், அவர் ஒரு ஆர்எஸ்எஸ் காரர்தான். இதனை வாஜ்பேய் ஒரு கட்டத்தில், 2003 ல் இப்படி சொன்னார்; “Sangh (RSS) is my soul) அதாவது ஆர்எஸ்எஸ் தான் என்னுடைய ஆன்மா.


பிரதமர் இந்திரா காந்தி 1975 – 1977 காலகட்டத்தில் வாஜ்பாயை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். 1977 தேர்தலில் வென்று மந்திரி ஆனார். ஆனால் தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு இந்திரா காந்தி மீது எந்த கோபமும் இல்லை. 1980 ஜூன் 23 ல் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த போது, அந்த செய்தி அறிந்த அடுத்த பத்து நிமிடத்தில் வாஜ்பாய் இந்திரா காந்தி யின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார்.

மூன்று முறை பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பாய். 1996ல் வெறும் 13 ம் நாட்கள் மட்டும் பிரதமராக இருந்தார். பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்த காரணத்தால், வாக்கெடுப்புக்கு போகாமலேயே அவரே ராஜினாமா செய்து விட்டு சென்றார். இரண்டாவது தடவை 14 மாதங்கள், பிப்ரவரி, 1998 முதல் ஏப்ரல் 17, 1999 வரையில் பிரதமராக இருந்தார். பின்னர், 1999 செப்டம்பர் முதல் மே, 2004 வரையில் பிரதமராக இருந்தார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் 2002 மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்தன. அப்போது மோடி குஜராத்தின் முதலமைச்சர். நேரில் சென்று குஜராத் நிலவரத்தை பார்த்த பின்னர் வாஜ்பாய் சொன்ன கருத்து, குஜராத்தை ஆள்பவர்களுக்கு (மோடி) ராஜதர்மா வேண்டும் என்பதுதான். '’இந்த படுகொலைகளுக்கு பிறகு நான் எந்த முகத்துடன் வெளி நாடுகளுக்கு செல்லுவேன்’’ என்று வெளிப்படையாகவே வாஜ்பாய் ஒரு முறை கூறினார்.

வாஜ்பாய் மென்மையானவர், மோடி கடினமானவர் என்றெல்லாம் ஒரு கால கட்டத்தில் விமர்சனங்கள் வந்தபோது, பாஜக வில் இருந்து பின்னர் ஓரங்கட்டப்பட்ட கோவிந்தாச்சரியா சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தை, '’வாஜ்பாய் ஆர்எஸ்எஸி ன் முகோடா’’ '’முகோடா’’ என்ற ஹிந்தி வார்த்தையின் பொருள் 'முகமூடி’. அதாவது தாய் ஸ்தாபனம், தனக்கு தோதான நேரங்களில் மென்மையான வாஜ்பாயை பயன்படுத்தும், கடினமான நேரங்களில் மோடியை பயன்படுத்தும். இந்த இடத்தில் மோடியின் '’கல்யாண’ குணங்களை’’ எவரும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாஜ்பாய் நல்லவர். ஆனால் அவர் சார்ந்திருக்கும் பாஜக தான் அபாயகரமான கட்சி என்று இந்தியா வின் பெரும்பாலான பிராந்திய கட்சிகள் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் “Right man in the wrong party” என்று சொல்லுவார்கள். இதற்கு வாஜ்பாய் அழகாக ஒரு பதிலடி கொடுத்தார். '’ஒரு பழம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பழத்தை கொடுத்த மரம் தவறானதாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதெப்படி சாத்தியமாகும்?’’.


இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த வாஜ்பாய் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூருக்கு அவர் பஸ் பயணம் மேற்கொண்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் கார்கில் யுத்தம் வெடித்தது. இருந்த போதிலும் அவர் பிரதமராக இருந்த காலம் முழுவதும் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த அவர் பெரு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். லாகூர் பஸ் பயணம் பாகிஸ்தானில் நூழைந்த போது வாஜ்பாய் சொன்னார்; '’என் பக்கத்து வீட்டுக்காரர் சந்தஷோமாக, நிம்மதியாக இல்லை என்றால் நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்’’. இதனை விட பேருண்மை வேறென்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை.
 வாஜ்பாய் என்றும் போற்றத் தகுந்த ஒரு தலைவர்தான். வாஜ்பாய் நலம் பெற்று மீண்டும் அவர் வீடு திரும்ப வேண்டும் என்று இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் விரும்பியது. ஆனால் அது ஈடேறவில்லை.

Sunday, 18 March 2018

வரலாற்று நாயகர் : மகா அலெக்சாந்தர்

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார்.கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.


கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.


மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.


அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. 

இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.


அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.


டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.


ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.

இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.


பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.


அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.


அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால், அலெக்சாந்தரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.


அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.

அதே சமயத்தில், அலெக்சாந்தர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையைப் பொன்னேபோல் போற்றினார். கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்கச் சிந்தனையாளர்களைவிட அதிகப் பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்குப் பெரிதும் காரணமாகும்.


அலெக்சாந்தர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார்.

நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரைப் போன்று, அலெக்சாந்தர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச் செல்வாக்கு அவர்களுடையதைவிடக் குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக் குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்குச் சென்றது.

அலெக்சாந்தரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாந்தரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பு, உடனடியாகவும், ஈரான், மெசொப்பொட் டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப் பண்பாடு விரைவாகப் பரவியது. அலெக்சாந்தருக்கு முன்பு, இந்த மண்டலங்களில் கிரேக்கப் பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாந்தர் பரப்பினார். பண்பாட்டுச் செல்வாக்கு என்பத எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாந்தர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்துப் பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமயக் கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின. பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச் செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப் பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது.

அலெக்சாந்தர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டுக் கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹீராத், கந்தஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின.

ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாந்தர், நெப்போலியன், இட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாந்தரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாந்தரின் செல்வாக்கைவிட மிகக் குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாந்தர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம் பெற்றிருக்கிறார்.

விண்வெளிஒரு விண்வெளி உடை 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது.

விண்வெளியில் உங்களால் அழ முடியாது. கண்ணீர் சிந்தாது!

விண்வெளிவீரர்களின் கருத்துப்படி விண்வெளி கருகிப்போன இறைச்சித்துண்டு / இரும்பு சூடாக்கிய மணத்தைக்கொண்டது!

விண்வெளி மையத்தில் இருக்கும் விண்வெளிவீரர்கள் தினமும் 15 சூரிய உதையத்தை காண்பார்கள்.

சர்வதேச விண்வெளி மையமே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகும். சுமார் 150 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது.

1977 இல் பூமியின் சமிக்ஞை உணரிகளுக்கு சுமார் 72 செக்கன்கள் நீட்சியுடைய ஒரு சமிக்ஞை கிடைத்தது. இன்றுவரை அது எங்கிருந்து எவரால் அனுப்பப்பட்டது என்பது கண்டறியப்படவில்லை!

விண்வெளி மையம் எனபது சுமார் 5 அடுக்கு உடைய ஒரு வீட்டுக்கு நிகரான பரப்பை உடையது. ஒரு மணி நேரத்தில் சுமார் 17,500மீட்டர் பயணிக்கிறது!

பல விண்வெளி வீரர்கள், விண்வெளியில் 2 இஞ்சி உயர அதிகரிப்பை அடைகிறார்கள். காரணம், ஈர்ப்பு விசை இல்லாமை!

விண்வெளி வீரர்களுக்காக முப்பரிமான பீட்சா தயாரிப்பு இயந்திரத்தை நாசா தயாரித்துள்ளது!

கையால் தொடக்கூடிய அளவு குளிர்ச்சியான நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கின்றன.

சனி கிரகத்தை சூழ உள்ள வளையம் உறுதியானதல்ல. தூசி, பனி மற்றும் கல் துகள்களால் ஆனது.

விண்வெளியில் எமது கண்களுக்கு சூரியன் மஞ்சளாக தெரியாது, வெள்ளையாகவே தெரியும்.

அறிவியல்Scientist என்ற சொல் 1833 இல் முதல் முதலில் பயன்படுத்தப்பட்டது.

நீண்ட நாள் கேள்வியான "கோழியா முட்டையா முதலில் வந்தது?" என்பதற்கு அறிவியல் பதில் கோழிதான்! முட்டையை உருவாக்க கூடிய புரதம் கோழியில் மட்டுமே உள்ளது!

ஒவ்வொரு நாளும் அண்ணளவாக 41 உயிரினங்கள் விஞ்ஞானிகளால் பெயரிடப்படுகிறது.

நில நடுக்கம் நீரை தங்கமாக மாற்ற வல்லது!

மதுக்கு செயற்பாட்டை காட்ட மூளைக்கு 6 நிமிடங்களே தேவைப்படுகிறது.

ஒளிவேகத்தில் பயணித்தால் கூட கலக்ஷியின் ஒரு முனையில் இருந்து இன்னோர் முனைக்கு செல்ல சுமார் 100 000 வருடங்கள் எடுக்கும்.

தேனிக்களை வெடிகுண்டை கண்டுபிடிப்பதற்கு ஏற்றாற்போல் பயிற்சி கொடுக்க முடியும்.

மனிதர்களில் இருக்கும் ஜீன்களை விட தக்காளியில் அதிகமான ஜீன்கள் உள்ளன.

நண்பர்களின் DNA ஒற்றுமை, தெரியாத ஒரு நபருக்கான ஒற்றுமையை விட அதிகம்!

உங்கள் நிறையில் 16.5% ஆன நிறையையே நீங்கள் நிலவில் இருந்தால் கொண்டிருப்பீர்கள்.

எமக்கும் வாழைப்பழத்திற்கும் இடையில் 50% DNA ஒற்றுமை உள்ளது.

பூமிக்கு சூரியனின் வெளிச்சம் வர சுமார் 8 நிமிடம் 20 செக்கன்கள் எடுக்கின்றன.

நிலவு வருடாந்தம் பூமியை விட்டு 3.78 சென்றிமீட்டர் தூரம் விலகி செல்கிறது.

Wednesday, 22 November 2017

யு-டியூப்பை தோற்கடிக்க வருது ’பேஸ்புக் வாட்ச் வீடியோ’; இதுல சம்பாதிக்கவும் வழியிருக்கு!

பேஸ்புக் நிறுவனம் புதிய வீடியோ சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் பெயர் பெற்றுள்ளது. இது யு-டியூப் போன்றே வீடியோக்களை பார்க்க, புதிய சேவையை கொண்டு வருகிறது. இதற்கு ’பேஸ்புக் வீடியோ வாட்ச்’ என்று பெயர்.

இந்த சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யு-டியூப் சேவையைப் போன்று, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை பேஸ்புக் ஆப், பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷனில் பார்க்க முடியும்.


உலகெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், லைவ் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

இதில் காணப்படும் வீடியோக்களுக்கு ரியாக்‌ஷன், கமெண்ட்ஸ் போட முடியும். யு-டியூப் வீடியோக்களை எப்படி பணமாக மாற்ற முடியுமோ, அதேபோல பேஸ்புக் வாட்ச் வீடியோக்களையும் பணமாக மாற்றலாம்.

நாமாகவே நிகழ்ச்சிகளை தொகுத்து, தயாரித்து, பதிவிட பேஸ்புக் ஊக்குவிக்கிறது.

Thursday, 7 September 2017

Nikola Tesla நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..?

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆன டெஸ்லா, இரண்டாம் தொழிற்புரட்சி உருவாக முக்கிய பங்கு வகித்தார்.தற்கால மாறுதிசை மின்னோட்ட மின்வலு முறைமைகள் பலவும் டெஸ்லாவின் கோட்பாடுகளை அடிப்படையாய் கொண்டே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். அம்மாதிரியான டெஸ்லாவின் முற்போக்கு ஆய்வுகளில் ஒன்றான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு (wireless power transmission) சோதனை, 1899-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது..!

 
 1899-ஆம் ஆண்டு, கொலராடோவில் உள்ள தனது கொலராடோ ஸ்பிரிங்ஸ் இல்லத்தில் டெஸ்லா வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சார்ந்த அவரது கருத்துப்படிவத்தை முயற்சிக்கும் பொருட்டு ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 
 
 
அந்த ஆய்வை அங்கு தான் நடத்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் டெஸ்லாவிற்கு கிடையாது என்பதும், இருப்பினும் அவர் அந்த ஆய்வை அங்கு அவர் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி 1923-ஆம் ஆண்டு ஒரு நிருபரிடம் டெஸ்லா கூற நேர்ந்தது. 
 
 
"நான் கொலராடோவில், செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை இருப்பை உணர்த்தும் அசாதாரணமான ஆதாரங்கள் சார்ந்த ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் மிகவும் உணர்ச்சிமிக்க வயர்லெஸ் ரிசீவர் இருந்தது" 
 
 
 
 
"அப்போது 1-2-3-4 என்ற பொருள் விளக்கம் கொண்ட சமிக்ஞைகள் எனக்கு கிடைத்து, அந்த சமிக்ஞையானது செவ்வாய் கிரக வாசிகளிடம் இருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எண்கள் என்பது உலகளாவிய ஒன்று" என்று டெஸ்லா கூறியுள்ளார். 
 
 இந்த தகவலை அளித்ததின் மூலம் டெஸ்லா அவரின் சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார், சில வருடங்களுக்கு பின்பு டெஸ்லா, ஏலியன் தொடர்பு கொண்டார் என்பதற்கு எதிரான கோட்பாடுகளை விஞ்ஞானிகள் வகுத்தன. 
 
அதாவது குறிப்பிட்ட நாளில் ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்பட்ட புயலின் ரேடியோ அலைகளைத்தான் ஏலியன் தொடர்பு என்று டெஸ்லா தவறாக அர்த்தம் கொண்டுள்ளார் என்கிறது ஒரு கோட்பாடு. 
 
ஆனால், பின்னர் மற்றொரு கோட்பாடு எழுந்தது. டெஸ்லா ஏலியன் தொடர்பு கொண்டது நிஜம் தான். அதாவது அவர் பூமி கிரகத்தை மர்மமான முறையில் சுற்றித்திர்யும் பிளாக் நைட் சாட்டிலைட்டிடம் இருந்து தகவல் பெற்றார் என்கிறது அந்த கோட்பாடு. 
 
பிளாக் நைட் செயற்கைக்கோள் என்பது பூமியை சுற்றித்திரியும் ஒரு பண்டைய அன்னிய கட்டமைப்பு என்று நம்பப்படும் ஒரு பறக்கும் பொருளாகும், அதனை தான் டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளார் என்றும் நம்பப்படுகிறது.

Tuesday, 18 July 2017

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை)

‘மேக்பெத்’ ஷேக்ஸ்பியரையோ,  ‘மகாபாரதம்’ வியாசரையோ, ‘இராமாயணம்’ கம்பரையோ, அவ்வளவு ஏன், ‘சிலப்பதிகாரம்’ இளங்கோவடிகளையோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி!) நல்லவேளை, இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கூச்ச மின்றி ஒருவர் இந்து நாளிதழில் எழுதுகிறார்: “The answer I found in the book is Prof. Sundaram Pillai, better known as ‘Manonmaniam’ Sundaram Pillai”. (27-10-2012). வேறொன்றுமில்லை, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் யார் என்று பலத்த சந்தேகம் அவருக்கு வந்துவிட்டதாம், ஒரு புத்தகத்தில் இந்த விடை கிடைத்ததாம்.
சுந்தரம் பிள்ளை:

எழுதியது மிகுதி, மறைந்தபோது வயதோ குறைவு (42-தான்) என்றாலும், தம் வாழ்நாளிலேயே பெரும்புகழ் பெற்றவர் சுந்தரம் பிள்ளை. 1855இல் ஆலப்புழையில் பிறந்தவர். பெற்றோர், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள். 1855இல் பிறந்தவர். 1897இல் மறைந்தார். திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் தத்துவம் கற்றார். அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குப் பின்னர் கிடைத்தது. இடையில் திருநெல்வேலி ம. தி. தா. (மதுரை திரவியம் தாயுமானவர்) இந்துக் கல்லூரி, ‘இந்துக் கலாசாலை’ யாக இருந்தபோது அதன் முதல்வராகவும் (1878) இருந்து அந்தக் கல்லூரியை மேம்படுத்தினார்.

பயின்றது தத்துவம் என்பதால் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குகந்த மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

தமிழின் நிலை:
பிற்காலத்தில் அவருடைய நண்பராக இருந்த ஜே. எம். நல்லசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதத்தில் எழுதுகிறார் சுந்தரம் பிள்ளை: “Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896). அதாவது, பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவம், நாகரிகம் ஆகும் என்கிறார். இதேபோல் அடுத்த ஆண்டு, 1897இல் எழுதியிருக்கிறார்: “India south of the Vindhyas, the Peninsular India, still continues to be India proper” (30-01-1897, Madras Standard). அதாவது மெய்யான இந்தியா என்பதே விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிதான் என்பது அவர் கருத்து.

இந்தக் கருத்துகள்தான் இதற்கு முன்னரே (1891) அவர் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்திலும் வெளிப்பட்டன. முழுமையாக அவ்வாழ்த்துப்பகுதி:

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் துளுவும்
உன்உதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

என்றைக்குமே பிறருக்கு பயப்படுகின்ற தமிழ்நாடு அரசு, இப்பாட்டைச் சிதைத்தும் வெட்டியும்  ‘ஒருமாதிரியாக’ 1970இல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. நியாயமாக 1955இல், அவர் பிறப்பு நூற்றாண்டில் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதும் வடக்கின வால்கள்தான் நாம், இல்லையா? ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே பயம் ஆயிற்றே! தெக்கணம் இந்தியத் தாயின் பிறைநுதல், அதில் திலகம் தமிழ்நாடு (‘திரவிட’ என்ற சொல் ‘தமிழ்’ என்பதன் வடமொழியாக்கம், அந்த அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார் சுந்தரம் பிள்ளை.) அத்திலகவாசனை போல் இருப்பவள் தமிழணங்கு.

இவை, கால்டுவெல்லின் பாதிப்பு சுந்தரம் பிள்ளைக்கு இருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் தவறான கருத்துகளை வெளியிட்டபோது கால்டு வெல்லை அவர் மறுக்கவும் தயங்கவில்லை.

திருஞான சம்பந்தரின் காலம்:

தமிழில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லை என்றும், திருஞான சம்பந்தர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும் கால்டுவெல் எழுதினார். (பாவம், அவர் சங்க நூல்களைப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது). இதனை மறுத்து சுந்தரனார் திருஞான சம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பதை நிலைநாட்டினார். இதற்காக எழுதப்பட்ட நூல்தான் ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞான சம்பந்தரின் காலம்’ என்ற ஆங்கில நூல். இது நூலாக வருவதற்கு முன் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழ்களில் 1891இல் கட்டுரைகளாக வெளிவந்தது. காலடி சங்கராச்சாரியார் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பது முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது (சமஸகிருதப் பெரியவர்களின் வரலாற்று ஆராய்ச்சி அல்லவா?) அவர் ‘திரவிட சிசு’ என்று ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி ஆதிசங்கரருக்கு முற்பட்டவர் ஞானசம்பந்தர் என்பதை நிலைநாட்டினார்.
இந்நூலுக்கு ஆதாரமாக அவர் திரட்டிய, ஆண்ட செய்திகள் பல. சான்றுக்குச் சில:  ஞானசம்பந்தர் தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார், அதனால் அவர் காலம் பிந்தியது என்ற வாதம். (இப்போதுள்ள தஞ்சை, கி.பி. எட்டாம் நூற்றாண்டு அளவிலே உருவாயிற்று). ஆனால், ஞானசம்பந்தர் குறிப்பிடும் தஞ்சாவூர் நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ‘பொத்தைத்’ தஞ்சாவூர் என்று சுந்தரனார் எடுத்துக்காட்டினார். இன்றைய தஞ்சை, மருக(ல்)நாட்டுத் தஞ்சை எனக் கருவூர்த் தேவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், கோச்செங்கணான் என்ற சோழஅரசன், கும்பகோணத்திற்கருகில் வைகல் என்னுமிடத்தில் கோயில் கட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார். எனவே அச்சோழன் காலத்தை உயர்ந்தபட்சக் கால எல்லையாகக் கொள்கிறார். அதேசமயம் தர்க்கத்திற்கு மாறானவற்றைப் புறக்கணிக்கவும் அவர் தயங்கவில்லை. சான்றாக, சி. வை. தாமோதரம் பிள்ளை, ‘கூன் பாண்டியன் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்தவன், ஞானசம்பந்தர் காலமும் அதுவே’ என்று கூறினார். இதை மிக எளிமையாக மறுக்கிறார் சுந்தரனார். ஞானசம்பந்தர் மடத்துத் தலைமை காலவரிசை, 1500 ஆண்டுகளுக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுந்தரனார் மிகச் சிறந்த ஆய்வாளர் என்பதைத் திருஞான சம்பந்தர் காலம் நிலைநாட்டியது.

பிற சில நூல்கள்:
சுந்தரனார் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ இருபது நூல்களுக்கு மேல் எழுதியதாகச் சொல்வார்கள். எழுதிய நூல்களில் முக்கியமானவை நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் (Some Milestones in the History of Tamil Literature)  ஆகியவை.
பத்துப்பாட்டு பற்றிப் பொதுவாக எழுதப்பட்ட நூல் The Ten Tamil Idylls  (பத்து வாழ்க்கைச் சித்திரங்கள்) என்பது. இதைத் தவிர, கிறித்துவக் கல்லூரி இதழ்களில் ஹாப்ஸ் பற்றியும், பெந்தாம் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதியிருக்கிறார்.

பத்துப்பாட்டு:

The Ten Tamil Idylls என்ற நூலில், பத்துப் பாட்டில் மூன்று பாடல்களை-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி- நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 1889இல் பத்துப்பாட்டின் பதிப்பு, உ. வே. சாமிநாதையரால் வெளியிடப்பட்டவுடனே 1891இல் இவற்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமிநாதையர் தம் வாழ்க்கை வரலாற்றில், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமக்கு மிக அன்புடன் கடிதங்கள் எழுதியது பற்றிக் (துரதிருஷ்டவசமாக, இந்தக் கடிதப் போக்குவரத்து, 1896இல் தான் தொடங்கியது) குறிப்பிட்டிருக்கிறார்.

திருவிதாங்கூர் மன்னர் வரலாறு:

சுந்தரனார் சிறந்த கல்வெட்டாராய்ச்சியாளரும் ஆவார். 1896இல் திருவிதாங்கூர் அரசு கல்வெட்டுத் துறையைத் தொடங்கியது. அந்தக் கல்வெட்டுத்துறை வளரவும் துணையாக இருந்தார் சுந்தரம் பிள்ளை. அதற்கு ஐந்தாண்டுகள் முன்பிருந்தே கல்வெட்டுகளை ஆராய்ந்து திருவிதாங்கூர் அரசர்களின் வழிமரபு பற்றி சுந்தரனார் எழுதினார். இந்நூலின் நான்காம் இயல், Miscellaneous Travacore Inscriptions என்பது. இவற்றை வெளியிட்டதோடு, For the first time brought to notice with their dates determined by inscriptions  என்ற குறிப்பையும் அளித்துள்ளார்.

சாத்திர சங்கிரகம்:

சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் என்பது 1888இல் வெளியாயிற்று. எவ்விதம் சாத்திரங்களைப் பகுக்கலாம் என்பது பற்றிய நூல் இது. “தற்கால நிலைமைக் கேற்பச் சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாம் என்பதும், அவற்றின் முக்கிய முறைமையும் அதை வகையெடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றொகை விளக்கம். இது திருவி தாங்கோட்டுக் கவர்ன்மென்றாருடைய நூதன பிரசங்க ஏற்பாட்டின்படி, ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக் கப்பட்டது” என்று முகவுரையாகக் குறிப்பிடுகிறார் சுந்தரனார். தமிழ் உரைநடைக்கு இந்நூல் புதியதொரு பரிமாணத்தையும் வடிவத்தையும் தந்துள்ளது என்று கருத்துரைப்பர்.

மனோன்மணீயம்:

சரியான திறானய்வு நோக்கில், இந்நூலை ஒரு நாடகம் என்பதைவிடக் காப்பியம் என்று சொல்லுவது பொருத்தமாகும். (எந்தச் சுவையுமற்ற உதயணன் கதை போன்ற நூல்களையும் சிறு காப்பியங்கள் என்று சேர்ப்பவர்களாயிற்றே நாம்!) சுவையில், சிலப்பதிகாரத்துககுச் சற்றும் குறையாதது மனோன்மணீயம் என்று சொல்லுவது மிகையாக இருக்கலாம். ஆனால் மணிமேகலைக்குச் சற்றும் குறைந்ததல்ல. யாப்பு வடிவிலும், கதைமாந்தர் பேசும் முறையிலும் கதை சென்றாலும், இதை வாசிப்பவர்க்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றதொரு நூலை நாம் படிக்கிறோம் என்ற எண்ணமே உண்டாகும்.

இதனை மேடையேற்றுவதும் இயலாது. (இதற்கு முன்னோடியாக ஆங்கிலத்தில் குளோசெட் டிராமா என்ற ஒருவகை இருப்பதை எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் அது ஒரு நல்ல இலக்கிய வகையாக அங்கும் அது உருப்பெறவே இல்லை.) ஒருவகையில் பின்னர் தமிழில் கவிதைநாடகம் என்ற ஒரு மோசமான படைப்புவகை தோன்ற இது காரணமாகிவிட்டது என்று சொல்லலாம். ஏனெனில், சுந்தரம் பிள்ளையின் படைப்பாற்றல் பின்வந்தவர்களுக்கு இல்லை. நாடகமாகச் சரிவர இயலவில்லை என்றாலும் சுந்தரனாரின் படைப்பாற்றல் இதை ஒரு காப்பியமாக நிலைநிறுத்துகிறது. எல்லாருக்கும் அத்தகைய திறன் இருக்குமா?

மனோன்மணீயம் “நாடக நடையில் எழுதப்பட்டிருக்கிறதே, காப்பியம் என்று சொல்லலாமா” என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியம் என்று சொல்லுவது போல இதைக் காப்பிய நாடகம் என்று சொல்லிக் கொள்ளுங்களேன்!

“மனோன்மணி(!)யம், மானவிஜயம் இவையெல்லாம் நாடகம் இல்லையா என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில், ஜவுளிக் கடையில் சேலைகட்டிய மாதாய் நிற்கும் பொம்மையை, பெண் என்று ஒப்புக்கொள்ளத் தயாரானால், இவற்றையும் நாடகம் என்று ஒப்புக்கொள்ளத் தடையில்லை” என்று தொ. மு. சி. ரகுநாதன், தம் இலக்கிய விமரிசனம் என்ற நூலில் கூறியுள்ள கருத்து பொருந்துவதுதான். சிறந்த தமிழ்ப் பற்றாளர், சிறந்த நூலாசிரியர் என்ற பாராட்டுப் பார்வை, தவறான மதிப்பீட்டுக்கு வழியமைக்கக் கூடாது என்பதை சுந்தரம் பிள்ளையே ஒப்புக்கொள்வார்.

இதன் கதை ஒரு மூன்றாந்தரமான ஆங்கிலப் படைப்பிலிருந்து பெறப்பட்டது (லார்டு லிட்டன் என்பவர் எழுதிய தி சீக்ரெட் வே என்ற கதை). என்றாலும் இதனைச் சிறந்த காப்பியமாகப் படைத்துள்ளார் சுந்தரனார். குறிப்பாக இதில் கதைக்குள் கதையாக வரும் ‘சிவகாமியின் சரிதம்’. இதன் தத்துவப் பொருள் போன்றவை எல்லாம் ஒருபுறமிருக்க, இதைப் படிக்கும்போது, ‘அடடா! ஒரு மிகச்சிறந்த இலக்கியப் படைப்பினைச் சுவைக்கும் இரசனையை அளிக்கிறது’ என்று மனதாரப் பாராட்டாமல் இருக்க இயலாது.
மனோன்மணீயத்திற்கு சுந்தரனார் அளித்த தமிழ்த்தாய் வாழ்த்து உலகப்புகழ் பெற்றுவிட்டது. சமஸ்கிருத நூல்களுடன் ஒப்பிட்டு அவற்றின் தர்க்கமின்மையையும் சங்கநூல்களின் சிறப்பையும் சுந்தரனார் இதில் பாராட்டினாலும், சமஸ்கிருதத்தின்மீது அவருக்கு வெறுப்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடையிலும் சமஸ்கிருதச் சொற்கள் சரளமாகவே வழங்கின. நமது மொழி தனிச் சிறப்புடையது என்பதை நிலைநாட்டுவதும், பெருமை கொள்வதும் சரி. ஆனால், அதற்காகப் பிறமொழி எதையும் வெறுக்கத் தேவையில்லை என்ற கருத்தை இளமையிலேயே எனக்குள விதைத்த நூல் மனோன்மணீயம். அப்படியானால் இந்த ஒப்பீடுகள் எதற்காக? நாமாக இதைச் செய்யவில்லை. நம் தலைமீது மற்றவர் ஏறி உட்காரும் போதும் அவர்களை நாம் பாராட்டிக் கொண்டிருக்கமுடியாது என்ற அரசியல் நோக்கினை அளித்ததும் இந்த நூல்தான்.

நாற்பத்திரண்டு வயதுக்குள், கல்வெட்டாராய்ச்சி, தர்க்கமுறை, அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பலவற்றிலும் தோய்ந்து அவற்றை முறையாக வெளிப்படுத்தியவர் சுந்தரனார். தமிழ், ஆங்கிலம், தத்துவம் ஆகிய முத்துறைகளில் வல்லுநர். ஒருபுறம் சைவப் பற்றும், அக்கறையும் இருந்தாலும், ஸ்பென்சர், ஹாப்ஸ் என அவர் போற்றிய அறிஞர்களின் கொள்கைகள் சுந்தரனாரின் இன்னொரு முகத்தையும் காட்டவல்லவை. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் மிக அரிய படைப்புகள் இவரால் தமிழுலகிற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.