Tuesday 18 October 2016

'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்

ஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது. 



கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஓர் இலவச செயலி 'கூகுள் போட்டோஸ்'. இது ஏதோ படங்களைத் தன்னிடத்தே தேக்கி வைத்து, அவற்றை நிர்வாகம் செய்திட வழி வகுக்கும் புரோகிராமாகத்தான் நாம் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலர், இந்த செயலி குறித்தும் அதனைப் பயன்படுத்துவது குறித்தும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த செயலியின் பல்வேறு பயன்பாடுகளை இங்கு காணலாம். 


கூகுள் போட்டோஸ் (Google Photos)


க்ளவ்ட் சேமிப்பு தளம், படங்களைத் தேக்கி வைக்கும் இடம் மற்றும் படங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் ஒரு சாதனம் எனப் பன்முக பயன்களைத் தரும் ஒரு செயலியாகும். இதனால், இதனை Flickr, iCloud, Dropbox, and OneDrive ஆகிய செயலிகளுக்குப் போட்டியாகக் கூடக் கருதலாம்.  நம்முடைய ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிள் போன்களிலிருந்து நம் போட்டோக்களை பேக் அப் செய்து வைக்கும் தளமாக நாம் இதனை அறிந்திருக்கிறோம். இணையத்தில் இதனை அணுகி, நம் போட்டோக்களைக் காணும் வசதியை இது தருகிறது. இதனை “high quality” (16 எம்.பி. அளவிலான போட்டோக்கள் மற்றும் ஹை டெபனிஷன் வீடியோக்கள்) என்னும் அமைப்பில் அமைத்தால், அளவற்ற எண்ணிக்கையில் போட்டோ மற்றும் விடியோ பைல்களை இதில் தேக்கி வைக்கலாம். இதற்கும் மேலான திறன் கொண்ட போட்டோ மற்றும் விடியோ பைல்கள் இருந்தால், அதற்கான இடத்தை நமக்கு கூகுள் தந்திருக்கும், கூகுள் ட்ரைவ் இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். இந்த வசதிகளைத் தவிர, வேறு சில பயன்பாடுகளையும் நாம் இதில் மேற்கொள்ளலாம். அவற்றை இங்கு காணலாம்.



ஆட்கள், இடங்கள் மற்றும் பிற தேடல்:

கூகுள் போட்டோஸ் தளம், நாம் எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பும் படங்களை, அவை எடுக்கப்பட்ட இடம், நாள் என்ற வகையில் தானாகவே வகைப்படுத்தி வைக்கிறது. கூகுள் ஏற்கனவே தான் கொண்டுள்ள, படங்களைப் புரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியும், தான் ஏற்கனவே கொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான படங்களின் அடிப்படையிலும், உங்கள் படங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, அவை சுட்டும் அல்லது காட்டும் பொருளை வகைப்படுத்திக் கொள்கிறது. இதனால், நாம் நம் போட்டோக்களை அவற்றின் வகைப்படி தேடி அறிய முடிகிறது. சென்ற மாதம் நாம் கலந்து கொண்ட திருமணம், விடுமுறையில் எடுத்த போட்டோ, நம் செல்லப் பிராணிகளின் படங்கள், உணவுப் பொருட்கள் எனப் பல வகைகளில் நம் படங்களைத் தேடிப் பெற முடியும். உங்கள் கூகுள் போட்டோஸ் தளத்தின் கீழாக, வலது பக்கம், உள்ள தேடலுக்கான ஐகானைத் தட்டி, கிடைக்கும் கட்டத்தில், உங்கள் தேடல் சொல்லை, எ.கா. உணவு, கார் என எது குறித்தும் டைப் செய்து, “Enter” அல்லது “Search” டேப் செய்து தேடினால், படங்கள் காட்டப்படும். தானாகக் குழுவாக அமைக்கப்பட்ட படங்கள், தேடல் கட்டத்தின் முதன்மைப் பிரிவிலேயே காட்டப்படுகின்றன. மேலாக, நாம் எடுத்த போட்டோக்களின் சில முகங்கள் காட்டப்படுவது இதன் சிறப்பு.



ஒரே மாதிரியான முகங்கள் தொகுப்பு: 


உங்களுடைய போட்டோக்களில் உள்ள முகங்களிலிருந்து, கூகுள் போட்டோஸ் மாதிரிகளை உருவாக்கி, அவற்றின் அடிப்படையில் குழுக்களை அமைக்கிறது. இவற்றின் அடிப்படையில், நாம் “Mom” என்றோ, அல்லது பெயர்களைக் கொடுத்தோ, போட்டோக்களைத் தேடலாம். இது போன்ற குழுக்களின் பெயர்கள் மற்றும் செல்லப் பெயர்கள் அனைத்தும், உங்கள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்த முடியாது. குழுக்களுக்குப் பெயர் கொடுக்க, அல்லது முகங்களின் அடிப்படையிலான பொதுப் பெயர்கள் கொடுக்க, முகக் குழு ஒன்றின் மேலாக உள்ள “Who is this?” என்பதில் டேப் செய்திடவும். இங்கு உள்ள கட்டத்தில், நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரினைத் தரவும். உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால், “Options” என்ற மெனுவில் டேப் செய்து, “Edit or Remove name label” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நபரின் படம் இரு குழுக்களில் இருந்தால், இரண்டையும் ஒன்றிணைக்கலாம். இவ்வாறு ஒரே முகத்தினை இரு குழுக்களில் கூகுள் போட்டோஸ் அமைப்பதனையும் தடை செய்திடலாம். இதற்கு “Settings” சென்று, “Group similar faces,” என்று இருப்பதன் அருகே உள்ள ஸ்விட்ச்சை இயக்காமல் வைக்கலாம்.



பேக் அப் அமைப்பை மாற்றலாம்: 

உங்களுடைய போட்டோ மற்றும் விடியோக்கள் அனைத்தும் குறிப்பிட்ட கூகுள் அக்கவுண்ட்டில் பேக் அப் செய்திடப்படும். இருப்பினும், நீங்கள் எந்த அக்கவுண்ட்டில் இவற்றை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை மாற்றி அமைக்கலாம். இதற்கு கூகுள் போட்டோ தளத்தில், “Settings > Back up and sync” எனச் சென்று மாற்ற வேண்டும். அக்கவுண்ட் பெயர் இடத்தில் டேப் செய்து மாற்றலாம். Upload Size என்ற இடத்தில் டேப் செய்து “High Quality” மற்றும் “Original” என்ற தன்மையினை நிர்ணயம் செய்திடலாம். “High Quality” என்பதைத் தேர்ந்தெடுத்தால், வரையறையின்றி போட்டோக்களையும், விடியோ பைல்களையும் சேவ் செய்திடலாம். “Original” நிலை தேர்ந்தெடுத்தால், கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவிற்கு இவற்றைச் சேமிக்கலாம்.



வை பி அல்லது நெட்வொர்க்:

 இணைய இணைப்பு என்பது இருவகையில் மேற்கொள்ளலாம். மொபைல் போன் சேவையோடு இணைந்த டேட்டா வகை இணைப்பு மற்றும் வை பி இணைய இணைப்பு. இதில் எந்த வகையில் இருக்கும்போது, அல்லது இரண்டு வகையிலும் இருக்கையில் போட்டோக்களை தரவேற்றம் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போல “Back up all” என்பதைத் தேர்ந்தெடுத்தால், போட்டோ மற்றும் விடியோ என இரண்டும் பேக் அப் ஆகும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி, இவற்றை அப்லோட் செய்தால், நெட்வொர்க் டேட்டா என அதிக செலவாகும். எனவே, வை பி மட்டும் எனத் தேர்ந்தெடுப்பதே நல்லது. இதில் While charging only என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இதனைத் தேர்ந்தெடுத்தால், நம் மொபைல் போன், பேட்டரியில் இயங்காமல், மின்சக்திக்கான இணைப்பில் இருக்கையில் மட்டும் நம் போட்டோக்கள் அப்லோட் செய்திடும். எனவே, விடுமுறையில் நாம் வெளியே செல்கையில், நம் பேட்டரியின் மின் சக்தி தீர்ந்துவிடுமோ என்ற பயம் தேவை இல்லை.


போட்டோக்களை அழித்துவிடலாமே:


உங்கள் மொபைலில் எடுத்த போட்டோக்களை நீங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது வேறு ஒரு க்ளவ்ட் ஸ்டோரேஜில் தேக்கி வைப்பதாக இருந்தால், கேமராவில் உள்ள படங்களை அழித்துவிடலாமே. கேமராவின் நினைவகம், புதியதாக எடுக்கப்படும் போட்டோக்களுக்குப் பயன்படுமே.



மற்ற செயலிகளிலில் உள்ள போட்டோக்கள்:


 கூகுள் போட்டோஸ் செயலி, அது எந்த மொபைல் போனில் இயக்கப்படுகிறதோ, அந்த மொபைல் போனில் எடுக்கப்படும் படங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும். வாட்ஸ் அப் போன்ற பிற செயலிகளிலில் கிடைக்கப் பெறும் போட்டோக்களையும் இதற்கு அனுப்ப வேண்டுமாயின், அவை எங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன என்பதை, கூகுள் போட்டோஸ் செயலிக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்கு, மெனுவில் உள்ள “Device Folders” என்பதனைக் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை எனில், “Settings > Back up and sync,” எனச் சென்று, “Choose folders to back up…” என்பதில் தட்டி, பேக் அப் செய்வதற்கான போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



காணும் தோற்றம் மாற்ற: 

படம் ஒன்றை விரல்களால் அழுத்தி இழுத்து, பெரிதாக மாற்றலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், கூகுள் போட்டோஸ் செயலியின் மூலம் இன்னும் சில செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அவை, daily view, போட்டோவினை திரை முழுக்கப் பார்க்க “comfortable” view எனச் சில தோற்ற வகைகளைக் காணலாம்.


ஒரே அழுத்தத்தில் பல போட்டோக்கள் தேர்ந்தெடுத்தல்:

நூறு போட்டோக்களை உங்கள் போனில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், நீங்கள் நூறு முறை தட்ட வேண்டியதிருக்கும். இதை கூகுள் போட்டோஸ் மூலம் தவிர்த்து, ஒரே தட்டலில் மொத்தமாகப் போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்க வேண்டிய போட்டோக்களில், முதல் போட்டோவில், சில விநாடிகள் கூடுதலாக அழுத்தவும். பின்னர், விரலை எடுக்காமல், மேல் கீழாக, பக்கவாட்டில் விரலை நகர்த்தி, போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கவும். இணைய தளத்தில் இதனை மேற்கொள்கையில், ஷிப்ட் கீ அழுத்தியவாறு ஒரே நேரத்தில் பல போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


அழித்ததைத் திரும்பப் பெற:

சற்று வேகமாகச் செயல்படுகையில், நீங்கள் நீக்க விரும்பாத போட்டோ ஒன்றினை அழித்தால், மீண்டும் அதனைப் பெற கூகுள் போட்டோஸ் வழி தருகிறது. நீங்கள் அழித்த போட்டோக்களை, கூகுள் போட்டோஸ் செயலி, தன் ட்ரேஷ் பெட்டியில் 60 நாட்கள் வரை வைத்திருக்கும். அந்த போல்டர் சென்று, மீண்டும் தேவைப்படும் போட்டோவினை மீட்டு எடுக்கலாம். 



தரவேற்றம்:

 கூகுள் போட்டோஸ் தானாகவே, போட்டோக்களை அதன் தளத்திற்கு அப்லோட் செய்திடும். ஆனால், அது டெஸ்க்டாப் அப்லோடர்களையும் கொண்டுள்ளது. போல்டர்களை முழுமையாக இழுத்துச் சென்று, photos.google.com தளத்தில் விட்டுவிட்டால், அதில் உள்ள போட்டோக்கள் தானாக அப்லோட் செய்யப்படும். மேலே சொல்லப்பட்ட வசதிகளுடன், இன்னும் சில வசதிகளும் கூகுள் போட்டோஸ் புரோகிராமில் கிடைக்கிறது. அவை மற்ற கூகுள் செயலிகளுடன் இணைந்து செயல்படுபவை ஆகும். அவற்றின் உதவிப் பக்கங்களில் இந்த வசதிகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் IOS 10 -ல் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள்

உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்கென தனி இடம் உள்ள நிலையில் இந்நிறுவனம் தனது அடுத்த படைப்பை பற்றி எப்பொழுது அறிவிப்பு செய்தாலும் ஸ்மார்ட்போன் ரசிகர்களை அது ஈர்க்கும் என்பது உண்மை.

 
இதனிடையே, ஆப்பிள் ஐபோனை உபயோகப்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு தனது அடுத்த பதிப்பான IOS 10-ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதே அளவுக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் கவலையும் கொடுத்துள்ளது.இந்நிலையில் IOS 10-ல் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து தற்போது பார்ப்போம்

 

நன்மைகள்:

சாதாரண ஆண்ட்ராய்டு போன்களில் ஒவ்வொரு முறையும் நாம் மொபைலை உபயோகப்படுத்திய பின்னர் லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவோ வேண்டும். ஆனால் IOS 10 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தால் உங்கள் ஆப்பிள் ஐபோனில் இந்த பிரச்சனை இல்லை.

நீங்கள் ஒரே ஒரு ஸ்வைப் செய்து போனில் உள்ள எதை வேண்டுமானாலும் உடனே பார்க்கலாம். அதேபோல் லாக் செய்ய மறந்துவிட்டாலும் பரவாயில்லை. அதுவே ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும். அதேபோல் ஒரே ஒரு ரைட் ஸ்வைப் செய்தால் உங்கள் ஐபோனில் வானிலை, செய்தி, இசை, போட்டோக்கள், ரிமைண்டர்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்கள் IOS 10 சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பின்னர் மெசேஜ்களை வேற லெவலில் அனுப்பலாம். சாதாரணமாக மெசேஜ் அனுப்பினால் ஒவ்வொன்றாக கியூவில் செல்லும். ஆனால் இதில் மொத்தமாக செல்வதுடன் ஸ்பெஷல் எபெகெட், அனிமேஷன் பேக்ரவுண்ட், இன்விசிபிள் லிங்க் உள்பட பல விஷயங்களை மெசேஜில் அனுப்பலாம்.

நீங்கள் பதிவு செய்யும் அனைத்து வகை புகைப்படங்களையும் ஏற்றுக்கொள்வதோடு, சில குறிப்பிட்ட புகைப்படங்களை தேர்வு செய்து வீடியோவாக மாற்றும் வசதியும் இதில் உண்டு. மேலும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வைத்திருக்கும் பட்சத்தில் போட்டோவை சியர்ச் செய்யும் வசதியும் இருப்பதால் மிக எளிதாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல அமைந்துள்ளது இந்த Siri ஆப். இதன் மூலம் நீங்கள் கட்டளையிட்டால் உடனடியாக வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் யூபர் உள்பட பல புதியவகையான ஆப்ஸ்களை எளிதாக கையாளலாம்.

பங்குவர்த்தகம் செய்பவர்களுக்கு உதவியாக ஒருசில ஆப்கள் ஆப்பிள் ஐபோனில் டீஃபால்ட்டாக இருக்கும்



பிரச்சனைகள்:

இதுவரை நாம் பல போன்கள் அன்லாக் செய்ய ஸ்லைடுதான் பயன்படுத்தியிருப்போம். ஆப்பிள் ஐபோனை வாங்கினாலும் அன்லாக் செய்ய ஸ்லைடு செய்யத்தான் ஆட்டோமெட்டிக்காக நமது விரல் செல்லும். ஆனால் இதில் அதற்கென ஒரு பட்டன் வைத்துள்ளார். இந்து பலருக்கு பிரச்சனையாகவே உள்ளது.

இந்த போனில் உள்ள மியூசிக் ஆப்-ன் வடிவத்தை பார்த்தாலே யாருக்கும் மியூசிக் கேட்க வேண்டும் என்ற ஆசை வராது. மோசமான டிசைன் மற்றும் பெரிய பெரிய ஃபாண்ட் நம்மை எரிச்சலாக்குகிறது.

ஆப்பிள் ஐபோனின் IOS 10 சாப்ட்வேர் பல வழிகளில் பயன்பாட்டார்களுக்கு நன்மையை கொடுத்திருந்தபோதிலும் பேட்டரியின் பவரை அதிகமாக உட்கொள்வதால் பேட்டரி லைப் குறைகிறது. எனவே IOS 10.1 அப்டேட் செய்யும்போது இந்த பிரச்சனையை ஆப்பிள் நிறுவனம் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IOS 10 -ல் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும் 'Raise to wake' ஆப்சன் சரியாக வேலை செய்யவில்லை என்று பலரிடம் இருந்து புகார் வந்து கொண்டிருக்கின்ரது.ஆப்பிள் ஐபோனின் IOS 10 சாப்ட்வேர் பயன்படுத்திய பலர் கூறும் இன்னொரு பிரச்சனை பிரிக்கிங் பிரச்சனை. எனவே உங்களது மொபைலை அப்டேட் செய்யும் முன்னர் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்

Monday 17 October 2016

அனைத்து ஐபோன் புகைப்படங்களிலும் 9:41 AM எனும் நேரம் குறிக்கப்படுவது ஏன்?

இன்றைய ஸ்மார்ட்போன்களின் ராஜாவாக என்ன தான் ஆண்ட்ராய்டு இருந்தாலும், அன்று தொடக்கம் இன்று வரை ஒரு தனித்துவமான ஸ்மார்ட் போனாக ஐபோன் இருக்கிறதென்றால் அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஐபோன் இரகசியம்
ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை ஐபோன், ஐபேட் சாதனங்களின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் 9:41 AM வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளீர்களா?

12:00, 11:11, 10:10 என்பது போன்ற பார்க்கும்போது அழகிய தோற்றத்தை தரக்கூடிய ஒரு நேரத்தை வைக்காமல் எப்பொழுதும் 9:41 AM நேரத்தை ஆப்பிள் நிறுவனம் ஏன் வைக்கிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
அது ஏனோ தானோ என்று வைக்கப்பட்ட நேரம் அல்ல மாறாக ஸ்டீவ் ஜாப்ஸ் ஆல் முதன் முதலாக உலகுக்கு ஐபோன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நேரமே அதுவாகும்.

வீடியோவுக்கு ப்ரிஸ்மா தோற்றம் வழங்க உதவும் செயலி

ப்ரிஸ்மா பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே அது அதி பிரபலம் ஆகியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
ஆடிஸ்டோ
ப்ரிஸ்மா செயலியானது எமது புகைப்படங்களை மிக அழாகான ஓவியங்கள் போல் செதுக்கிக் கொள்ள உதவுகிறது. என்றாலும் எமது வீடியோ கோப்புக்களை அதன் மூலம் எடிட் செய்வதற்கான வசதி  இதுவரை வழங்கப்படவில்லை.


எனினும் குறையை நிவர்த்தி செய்கிறது ஆடிஸ்டோ எனும் புதிய செயலி. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில்  இருந்து இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம்.

இது எமது வீடியோ கோப்புக்களை ஓவியம் போல் மாற்ற உதவுகிறது. பயன்படுத்துவது மிகவும் இலகு. இதனை ஐபோன்களிலும் பயன்படுத்த முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ கோப்புக்களுக்கே இது ஆதரவளிக்கிறது.

வீடியோ ஒன்றை சித்திர பாங்குக்கு மாற்றுவது எப்படி?

படி 1: முதலில் இந்த செயலியை நீங்கள் தரவிறக்கி திறந்துகொண்ட பின் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா செயல்பட ஆரம்பிக்கும்.
ஆடிஸ்டோ செயலி

படி 2: பின்னர் குறிப்பிட்ட செயலியின் கீழ் மத்திய பகுதியில் இருக்கும் பட்டனை சுட்டுவதன் மூலம் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ ஒன்றை உங்களால் பதிவுசெய்ய முடியும்.
ஆடிஸ்டோ செயலி ஆண்ட்ராய்டு
படி 3: பின்னர் உங்களுக்கு விருப்பமான சித்திர அமைப்பொன்றை (Art Filter) தெரிவு செய்ய வேண்டும்.
ஆடிஸ்டோ செயலி ஆண்ட்ராய்டு மொபைல்
அவ்வளவு தான்!
இனி ஒருசில செக்கன்களில் நீங்கள் தெரிவு செய்த சித்திர பாங்குக்கு உங்கள் வீடியோ கோப்பு மாற்றப்பட்டு தரப்படும்.
குறிப்பு: உங்கள் இணைய வேகத்தை பொறுத்து உங்கள் வீடியோ மாற்றப்படும் நேர அளவு மாற்றமடையும்.
நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்

வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.
வாட்ஸ்அப்  forward
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.