Tuesday 3 March 2015

கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்

7GmeES2.png
நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் சர்ச் இஞ்சினில் பதியப்பட்டு, அதனைப் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்கக் கிடைக்கும். இவை தனிப்பட்ட நபரின் தேடல்கள் என்றால், இவை காட்டப்படக் கூடாதே. இவற்றை சர்ச் இஞ்சினிலிருந்து நீக்கப்படும் வழிகளை நாம் தெரிந்து கொண்டால், நிச்சயம் நிம்மதியாக இருப்போம். அவற்றை இங்கு காணலாம். 
முதலில், உங்கள் கூகுள் அக்கவுண்ட் வழியே உட்செல்லவும். பின்னர் கூகுள் ஹிஸ்டரி பக்கம் (https://history.google.com/history/) செல்லவும். நீங்கள் ஏற்கனவே உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்திருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். 
உங்கள் கூகுள் தேடல்களின் ”ஹிஸ்டரி” பக்கம் காட்டப்படும். இந்தப் பக்கத்தில் மேலாக உங்கள் தேடல் வகைகள் (trends) காட்டப்படும். இதற்குக் கீழாக, ஒரு செக் பாக்ஸ் மற்றும் “Remove items” பட்டன் ஒன்றும் தரப்படும். இதற்குக் கீழாக, உங்கள் தேடல்களின் வகைகள் பட்டியலிடப்படும். அனைத்து தேடல் குறிப்புகளையும் நீக்க வேண்டும் எனில், செக் பாக்ஸ் தேர்ந்தெடுத்து, “Remove items” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் எத்தனை பதிவுக் குறிப்புகளை நீங்கள் நீக்கியுள்ளீர்கள் என்று ஒரு செய்தி காட்டப்படும். 
இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பக்கத்தில், நீங்கள் மேற்கொண்ட அனைத்து தேடல் பதிவுகளும் காட்டப்படுவதில்லை. நீங்கள் நீக்கிய பின்னர், அங்கு உங்களின் இன்னும் சில தேடல் பதிவுகளைப் பார்க்கலாம். இவற்றையும் நீக்க வேண்டும் என எண்ணினால், மீண்டும் செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து, “Remove items” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அப்போது காட்டப்படும் பதிவுகளுக்கு முன்னால் மேற்கொண்ட தேடல் பதிவுகளைக் கண்டு நீக்க வேண்டும் என எண்ணினால், “Older” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த பட்டன், அந்தப் பக்கத்தில் காட்டப்படும் பட்டியலுக்கு மேலாக, வலது பக்கத்தில் காணப்படும். இதே போல இன்னொரு பட்டன் பட்டியலுக்குக் கீழாகவும் காட்டப்படும்.
உங்கள் தேடல் குறிப்புகள் மிக அதிகமாக இருந்தால், இப்படி ஒவ்வொரு பக்கமாகக் கண்டறிந்து நீக்குவது சற்று கடினமாகத்தான் இருக்கும். பல பதிவுக் குறிப்புகளை ஒரே நேரத்தில் நீக்க வேண்டும் என எண்ணினால், “History” பக்கத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கியர் பட்டனைக் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் “Remove Items” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் “Remove Items” என்ற டயலாக் பாக்ஸில், “Remove items from” என்ற பட்டியலில் ஏதேனும் ஓர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேடல்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் என எண்ணினால், “the beginning of time” என்பதனைத் தேர்ந்தெடுத்து “Remove” என்பதனைக் கிளிக் செய்திடவும். 
இனி உங்கள் தேடல்கள் குறித்த பதிவுகள் எதுவும் இருக்காது. இந்த வேலையை மேற்கொண்ட பின்னர், நம் தேடல்களை, கூகுள் பின் தொடர்ந்து கண்காணிப்பதனால் தானே இந்த பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏன், நம்மைப் பின் தொடர்வதிலிருந்து கூகுள் தேடல் சாதனத்தை நிறுத்தக் கூடாது என நாம் எண்ணலாம். அதற்கும் வழி உள்ளது. தேடுவதைப் பதிவு செய்வதை முதலில் தற்காலிகமாக நிறுத்தலாம். “History” திரைப் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில் உள்ள கியர் ஐகானை கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Account history” பக்கம் கிடைக்கும். இதில் “Pause” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். நீங்கள் உறுதியாக உங்கள் தேடல்கள் பதிவு செய்யப்படக் கூடாது என முடிவு செய்கிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் தேடல்களை கூகுள் தெரிந்து பதிவு செய்வதில் உள்ள நன்மைகளைப் பட்டியலிடும். அவ்வாறு அறியப்படக் கூடாது என்றால், மொத்தமாகத் தடை செய்திடாமல், அப்படிப்பட்ட தேடல்களின் போது, மற்றவர் அறியாத வகை வழியான Incognito mode நிலையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அறிவுறுத்தும். 
ZeNE4SG.jpg
இதற்குப் பின்னும் நீங்கள் தேடலைப் பதிவு செய்வதனை நிறுத்தச் செய்திட வேண்டும் என முடிவு எடுத்தால், இந்த டயலாக் பாக்ஸில், “Pause” என்பதில் கிளிக் செய்திடவும். உடன், நீங்கள் “Account history” பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். “Pause” பட்டன், “Turn on” என்ற பட்டனாக மாறிவிடும். மாறிய இந்த பட்டனில் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் உங்கள் தேடல்களைப் பதிவு செய்திட விருப்பமா என்று கேட்கப்படும். 
கூகுள் சர்ச் தேடல்களைப் பின் தொடர்வதனை நிறுத்துவதுடன், ஹிஸ்டரியை சேவ் செய்வதிலிருந்து, குக்கீஸ் மற்றும் நம் தனி நபர் தகவல்களைப் பதிவு செய்வதனை நிறுத்தலாம். ஆண்ட்ராய்ட் சாதனங்களில், ஹிஸ்டரி, கேஷ் மெமரி, குக்கீஸ் போன்றவற்றை நீக்கிடவும் வழிகள் உள்ளன. ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் சபாரி பிரவுசரில் உள்ள இவற்றை நீக்கவும் இதே போன்று வழிகள் உள்ளன. பேஸ்புக் சர்ச் ஹிஸ்டரியையும் நீக்கலாம்.

கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள்

பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேடுவதைக் காட்டிலும் நாமும் தேடி அவற்றை அறிந்து நீக்க முடியும். வாரம் ஒரு முறை இந்த தேடும் வேலையை மேற்கொண்டால், திடீரென வைரஸ் புரோகிராம்கள் தாக்கும் நிலை வராது. இதற்கு ஒரு முறை தேடி அறிய அதிக பட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 10 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாமே. இதற்கு, வைரஸ் புரோகிராம்கள் எங்கெல்லாம் தங்கி இயங்கும் குணம் கொண்டவையாக உள்ளன என்று அறிந்திருப்பது நல்லது. அந்த இடங்களை இங்கு காணலாம்.

1.ஆட்/ரிமூவ் புரோகிராம் (Add/Remove Programs): 
சிறிதும் தேவைப்படாத புரோகிராம்கள் என்று ஒரு வகை உள்ளன. இவற்றை PUPs அல்லது Potentially Unwanted Programs என அழைப்பார்கள். இந்த புரோகிராம்கள், வழக்கமான பயனுள்ள புரோகிராம்களுடன் தொற்றிக் கொண்டு நம் கம்ப்யூட்டர்களை வந்தடையும். இதற்குக் காரணம், நாம் தரவிறக்கம் செய்திடும் புரோகிராம்களை, அதற்கான நிறுவன இணைய தளத்திலிருந்து இல்லாமல், வேறு ஒரு இணைய தளத்திலிருந்து, அதே புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திருப்போம். அப்போது உடன் ஒட்டிக் கொண்டு சில புரோகிராம்கள் தரப்படும். இந்த புரோகிராமினை உடன் இணைத்து அனுப்ப, சில வேளைகளில், மூல புரோகிராம்களை வடிவமைத்தவர்கள் அனுமதி அளித்திருப்பார்கள்.
அவர்களுக்கு இணைக்கப்படும் புரோகிராம்கள் குறித்தும் அவை தரக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் அறியாமல் இருப்பார்கள். இவற்றைக் கண்டுபிடித்து நீக்கிவிடலாம். இதற்கு Start மெனுவிலிருந்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு Add/Remove Programs அல்லது Programsதேர்ந்தெடுக்கவும். இது உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ப மாறுபடும். இந்த இரண்டும் இல்லை என்றால், Programs and Features என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அண்மைக் காலத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைப் பட்டியலிடும். இந்த பட்டியலைப் பார்த்து, நமக்குத் தெரியாமல், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட, தேவையற்ற புரோகிராம்களை நீக்கவும். 

2. பிரவுசர்களைச் சோதனை செய்க:
 நம்மை அறியாமல் நாம் தவறான ஒரு லிங்க்கில் கிளிக் செய்திடுவதும், அறியாத சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுவதும், கெடுதல் விளைவிக்கும் பிரவுசர் ஆட் ஆன் புரோகிராம்களையும், ப்ளக் இன் புரோகிராம்களையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிய வைக்கும். இவை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தனிப்பட்ட தகவல்களைத் திருடும்; மற்றும் உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே, உங்கள் பிரவுசரில் உள்ள ஆட் ஆன் புரோகிராம்கள் அனைத்தையும் அவை சரியானவை தானா? நீங்கள் அறிந்துதான் அவை உள்ளே பதியப்பட்டனவா என ஆய்வு செய்திடவும். தேவையற்றவற்றை உடனடியாக நீக்கவும். இவற்றைச் சில வேளைகளில் ஆட் / ரிமூவ் புரோகிராம்ஸ் பக்கம் வழியாக நீக்க வேண்டியதிருக்கும். பிரவுசர்களில் இவற்றை நீக்கும் வழிகளைப் பார்க்கலாம்.
குரோம்: பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்கவும். அதில் முகவரி கட்டத்தில் chrome://extensions என டைப் செய்து எண்டர் தட்டவும். தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்க, அவற்றைத் தேர்ந்தெடுத்து, ட்ராஷ் ஐகானில் கிளிக் செய்திடவும். 
இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறக்கவும். வலது மேல் மூலையில் உள்ள கியர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். இனி Manage Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இக்கு தேவைப்படாத ஆட் ஆன் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, Disable அல்லது Remove என்பதில் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில், இதே போல பக்கம் ஒன்றைத் திறந்து about:addons என அட்ரஸ் பாரில் டைப் செய்து எண்டர் தட்டவும். தேவையற்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்து Remove என்பதில் கிளிக் செய்தால், அவை அன் இன்ஸ்டால் செய்யப்படும்.

3. இயக்கப்படும் சேவைகளும் இயக்க வழிகளும்:
சில வைரஸ் புரோகிராம்கள், மிகத் தந்திரமாக, நாம் காண இயலாதபடி ஒளிந்து கொண்டிருக்கும். நம் கம்ப்யூட்டரில் இயங்கும் சேவைகள் வழியாகத்தான் இவற்றை அறிய முடியும். நம் கம்ப்யூட்டர் இயங்கும் போது என்ன என்ன சேவைகள் நமக்கு, எந்த புரோகிராம்களினால், வழங்கப்படுகின்றன என்று Task Manager வழியாக அறியலாம். டாஸ்க் மானேஜரை இயக்க கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்(Ctrl + Alt + Del ) கீகளை அழுத்தவும். இந்த விண்டோவில் கிடைக்கும் முதல் டேப் Processes என்று இருக்கும். இந்த பட்டியலைப் பார்க்கவும். இதில் நீங்கள் கண்டிராத சேவை உள்ளதா எனப் பார்க்கவும். இருப்பின் அவற்றை முதலில் நிறுத்திப் பார்த்து, பின்னர் அதன் மூல புரோகிராமினை நீக்கலாம். இவற்றை அறிய, சந்தேகப்படும் சேவையின் பெயரைத் தேடுதல் கட்டத்தில் அளித்து கண்டறியவும். இந்த விண்டோவில் அடுத்த முக்கியமான டேப் Services ஆகும். இதில் உள்ள descriptionவரிசை, இந்த சேவையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறும். இங்கு காணப்படும் சேவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அவற்றின் சரியான பெயரைத் தேடி அறியவும். அல்லது ProcessLibrary or FileNet சென்று அதன் பெயருக்காகத் தேடலாம். எப்போது ஒன்றின் இயக்கம் அல்லது சேவை குறித்து நீங்கள் அறிகிறீர்களோ, அது பாதுகாப்பானதா இல்லையா என அறிவீர்கள். அல்லது அதனை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்தும் தெரியவரும். உடனே, அவற்றை வைத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவு எடுத்து செயல்படலாம்.

4. ஸ்டார்ட் அப் சோதிக்க: 
நம் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, பல புரோகிராம்கள், அதன் இயக்கத்திற்குத் துணை செய்திடும் வகையில், சில அடிப்படைச் செயல்பாடுகளைத் தருவதாகவும் திறக்கப்படும். கம்ப்யூட்டர் மூடப்படும் வரை, இவை பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த பட்டியலில், சில வைரஸ் புரோகிராம்கள் தங்களை இணைத்துக் கொள்ளும். இவற்றை msconfig என்ற டூல் மூலம் கண்டறிந்து முடக்கி வைக்கலாம். அல்லது புரோகிராமினைத் தெரிந்து கொண்டு, அவை இருக்கும் இடம் சென்று அழிக்கலாம். முதலில் இயக்கத்தினை முடக்கி வைத்து, கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். கம்ப்யூட்டர் இயங்கினால், அதனை நீக்கிவிடலாம். கம்ப்யூட்டர் இயங்க மறுத்தால், அல்லது அது குறித்து வேறு நோட்டிபிகேஷன் வந்தால், அதனை மீண்டும் தொடங்கும் புரோகிராம் பட்டியலில் இணைத்து இயக்க வைக்கலாம்.
உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது முந்தைய சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் இருந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து அதில் Run என்பதில் கிளிக் செய்திடவும். கட்டத்தில் msconfig.exe என டைப் செய்து ஓகே தட்டவும். இப்போது எம்.எஸ். கான்பிக் விண்டோ திறக்கப்படும். இங்கு உள்ள டேப்களில் ஸ்டார்ட் அப்(Startup) கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் புரோகிராம் பட்டியலில், தேவைப்படாத புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் விளக்கத்தினைப் படிக்கவும். அதன் பின்னரும் அந்த புரோகிராம் தேவை இல்லை என முடிவு செய்தால், disable செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, எம்.எஸ். கான்பிக் விண்டோ சற்று வித்தியாசமாகக் கிடைக்கும். இருப்பினும் செயல்பாடு ஒரே விதமாகவே இருக்கும்.

மைக்ரோசாப்ட் தரும் 100 ஜிபி இலவச இடம்

m0SB8RP.png
சென்ற வாரம்,மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில், புதிய அறிவிப்பு ஒன்றை வழங்கியது. ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பிங் தேடல் சாதனம் பயன்படுத்தினால், ஒன் ட்ரைவில் பைல் பதியும் இடத்தின் அளவை 100 ஜி.பி. ஆக உயர்த்தியது. 
ஒன் ட்ரைவ் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும், மைக்ரோசாப்ட் 10 ஜி.பி. அளவில் இலவச இடம் அளிக்கிறது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோருக்கு, ஒன் ட்ரைவ் பயன்பாடு, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்ததாகவே கிடைக்கிறது. இது, விண்டோஸ் 10 மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது பிங் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், இலவசமாக 100 ஜி.பி. இடம் தருவதனை அறிவித்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டது போல, இந்த திட்டம், முதலில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அப்போது, அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள், சற்று சுற்று வழியை மேற்கொண்டு இந்த சலுகையினைப் பெற்றார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சலுகையினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள், https://login.live.com/oauth20_authorize.srfclient_id=000000004C12B387&scope=wl.signin%20wl.basic%20wl.emails%20wl.skydrive%20wl.onedrive_provision_quota&response_type=code&redirect_uri=https://preview.onedrive.com/callback.aspxஎன்ற லிங்க்கில் கிளிக் செய்து, அங்கு தங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் குறித்த லாக் இன் தகவல்களை அளிக்க வேண்டும். இதன் மூலம் சைன் இன் செய்த பின்னர், அவருக்குத் தானாக, 100 ஜி.பி. ஒன் ட்ரைவ் ஸ்டோரேஜ் இடம், இரண்டாண்டுகளுக்கு அளிக்கப்படும்.
மைக்ரோசாப்ட், தன் ஒன் ட்ரைவில் இடத்தை நான்கு வகைகளில் அளித்து வருகிறது. முதல் 15 ஜி.பி. முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது. 100 ஜி.பி. இடம் வேண்டும் எனில், மாதந்தோறும் 1.99 டாலர் அளிக்க வேண்டும். 200 ஜி.பி. இடத்திற்கு 3.99 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு டெரா பைட் தேவைப்படுவோர், ஆபீஸ் 365 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால், மாதம் 6.99 டாலர் செலுத்த வேண்டும். இப்போது பிங் தேடல் சாதனப் பயன்பாடு ஊக்குவிக்கும் திட்டத்தில், அவர்களுக்கு 100 ஜி.பி. இலவச இடம் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுவதால், இரண்டாண்டுகளுக்குப் பின்னர், அவர்கள், மேலே குறிப்பிட்ட கட்டணத்திட்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

வேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா

பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

வேற்று கிரகம், planet, moon, நிலா
நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
 
நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது.
 
சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்தபோதும் நிலவு உருவானதற்கு பொருந்திவரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்துவருகிறது.
 
தியா
 
ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் அதற்கு இதுவரை இல்லாமல் இருந்துவந்தது.
அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புரானத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள்.
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான் - அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் இரசாயன மூலக்கூறுகளும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்டதாக கருதப்பட்டது.
 
ஆக்ஸிஜன் ஐசடோப்
 
ஆனால் மேலும் நூதனமான ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் இரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட்பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதென்றும் ஆய்வை வழிநடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார்.
 
பாறைகளில் காணப்படும் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவைகளுக்கிடையில் வித்தியாசங்களை அளந்து டாக்டர் ஹெர்வார்ட்ஸ் இந்த ஆய்வை செய்துள்ளார்.
 
பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவை ஒரு விதமாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறு விதமாகவும் இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆனால் நிலவுப் பாறையில் வேற்று கிரக தோற்றத்தைக் குறிக்கக்கூடிய அந்த வித்தியாசம் மிகக் குறைவாகவே தென்படுகிறது.
 
எனவே வேற்று கிரகம் பூமியின் மீது மோதியதென்ற கோட்பாடு சரியாக இருக்குமா என்று சில விஞ்ஞானிகள் இப்போதும் ஐயம் எழுப்புகின்றனர்.

வாட்ஸ் ஆப் மூலம் ஸ்கைபில் கால் செய்யும் வசதி: விரைவில் அறிமுகம்

வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் 'வாய்ஸ் காலிங்' வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
 
 
விரைவாக மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது வாட்ஸ் ஆப் (WhatsApp). அண்மையில், 'வாய்ஸ் காலிங்' வசதிக்கான இண்டர்பேஸ் பல இணையதளங்களில் வெளியானது. 
 
இப்போது ஸ்கைப் (Skype) மூலம் கால் செய்யும் வசதியையும் வாட்ஸ் ஆப்-ல் இணைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளளன. தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதில் பிரபலமான Maktechblog இந்த தகவலை கசியவிட்டுள்ளது.
 
வாட்ஸ் ஆப் நவம்பர் மாத அப்டேட்டிலேயே இந்த புதிய 'Call via Skype' வசதிக்கான பரிந்துரை இருந்ததாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், அழைப்பை நிறுத்தி வைக்கும் கால் ஹோல்டு வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
அழைப்புப் பதிவுகளுக்கான (Call logs) களுக்காக தனித்தனியே ஸ்கீரின்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும், வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கும் போது குறுஞ்செய்தி (message) மற்றும் அழைப்புகளைப் படிப்பதற்கு வசதியாக டிரைவிங் மோட் மற்றும் தொந்தரவு செய்யவேண்டாம் என்னும் வசதியும் விரைவில் வாட்ஸ் ஆப் - ல் வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.