நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத் தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்கமுடியுமா?”
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக் கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
ஒரு குடும்பத்தைப் பொருத்த வரையில் அந்த இறைசக்தி குல தெய்வமாக, அவர்களுக்கான ஒருபெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வது கூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப் பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்துபார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப் படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒருநாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப்பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒரு நாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.
குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.
மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
பெண்களும் குல தெய்வங்களும்
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும்.புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை . எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.
இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்!
எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி – இயன்றபோது – (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை போகும் போக்கை…
அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்
வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும்.
நமக்கான தெய்வங்கள்
1.வீட்டு தெய்வம்
தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.
2. குல தெய்வம்
ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம்என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’, ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
3. இன தெய்வம்
பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத் தெய்வங்களாக இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத் தெய்வங்கள் விளங்குகின்றன.
4.ஊர் தெய்வம்
வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர்.
தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய தெய்வங்களை அடையாளம் காணலாம்.
5.வெகுசன தெய்வங்கள்
சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்ற பெயரில் விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.
அண்ணன்-தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்
நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்
குலதெய்வம்
ஒரு தெய்வம் என்பது இன்னொரு தெய்வத்திடம் இருந்து அதாவது பரமாத்மனிடம் இருந்து வந்ததுதான். அதாவது உலகெங்கும் பல்வேறு ரூபங்களில் பல்வேறு தரப்பினர் வணங்கும் தெய்வங்கள் அனைத்துமே பரமாத்மனிடம் இருந்து வந்தவையே ஆகும். முதலில் பரமாத்மன் படைத்தது மூன்றே தெய்வங்களைத்தான். அந்த முதல் நிலையில் உள்ளவர்கள் பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான். அந்த பரமாத்மன் தனக்குத் தானே ஒரு ரூபம் தந்து அதை சிவபெருமானாகினார் என்றும் கூறுவார்கள். காரணம் பரமாத்மன் என்பது உருவமற்ற சிவனும்-பார்வதியும் இணைந்திருந்த சிவசக்தி ஸ்வரூபம் ஆகும். அந்த பரமாத்மனை பெண்ணினமாகவே கூறுவார்கள். காரணம் கருவுற்று குழந்தைகளைப் படைப்பது பெண்கள் என்பதினால் தெய்வங்களைப் படைத்த பெண்ணாக பரமாத்மனை கருதினார்கள்.
அப்படி படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் எண்ணவே முடியாத அளவில் கோடிக்கணக்கான உயிரணுக்களை தம்முள் கொண்டு படைக்கப்பட்டவர்கள். ஆகவே முதலில் படைக்கப்பட்ட மூவரும் தம்முள் இருந்த அணுக்களை தனது சார்ப்பிலே பல ரூபங்களில், பலவேறு உருவங்களில், பல்வேறு நிலைகளில் உருவாக்கி ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள். அவர்கள் மேலே தேவலோகத்திலே படைக்கப்பட்டு இருந்ததினால் கீழே இருந்த பூமி மற்றும் நான்கு திசைகளில் தம்முடைய அணுக்களை அனுப்பியதினால்தான் ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தமது படைப்புக்குப் பின்னர் பிரும்மன் கோடி கோடியான ஜீவன்களைப் படைக்க, மற்ற இருவரும் அந்த ஜீவன்களைக் காக்கும் மற்றும் அழிக்கும் அவதாரங்களைப் படைத்தார்கள். அவர்களுக்கு பல்வேறு சக்திகளை தந்தார்கள். அவர்களது பணிகளை நிர்ணயித்தார்கள். இதனால்தான் தொண்ணூற்றி ஐந்துக்கும் அதிக சதவிகிதத்திலான தெய்வீக அவதாரங்கள் மற்றும் தேவதைகள் அனைவருமே விஷ்ணு அல்லது சிவபெருமானின் வழிமுறையை சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்..
அதனால் மூவரில் அந்த இருவருக்கு மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் ஐந்து நிலைகளிலும் பல லட்சக்கணக்கான அவதாரங்கள் இருக்க பிரும்மனுக்கு மட்டும் மிக மிகக் குறைந்த அளவிலேயே அவதார ரூப கணங்கள் இருந்தன. அதனால்தான் பிரும்மாவை வேண்டிக் கொண்டு செய்யப்படும் விரதங்களும் நியமங்களும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. பிரும்மாவினால் படைப்பைக் கொடுக்க முடிந்தது, அவரை வேண்டித் தவம் இருந்தவர்களுக்கு அழிவற்ற நிலை என்ற அளவு அருள் புரிய முடிந்தது. ஆனால் சிவபெருமானைப் போலவும், விஷ்ணுவைப் போலவும் பல்வேறு ரூபங்களை எடுத்து அசுரர்களையும், ராக்ஷசர்களையும், அரக்கர்களையும் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களை அழித்ததான புராணங்கள் அல்லது வரலாறுகள் எதுவுமே இல்லை. அதன் காரணம் பின்னர் பிரும்மா சாபம் பெற்று பிரபஞ்சத்திலே மக்களால் பூஜிக்கப்படாத கடவுளாக இருப்பார் என்பது முடிவாகி இருந்ததினால்தான் இந்த நிலை இருந்துள்ளது. பிரும்மா கோடி கோடியான ஜீவன்களைப் படைத்தப் பின் விஷ்ணுவும், சிவபெருமானும் அனுப்பிய அவதாரங்களும், ரூபங்களும் கண்களுக்குப் புலப்படாத வகையில் இருந்து கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்ட உயிரினங்களை காப்பற்றுவதற்காக பிரபஞ்சத்தில் உலவி வரலாயின.
இப்படியாக சிவபெருமான் மற்றும் விஷ்ணுவினால் படைக்கப்பட்ட பல அவதாரங்களில் ஒன்றாகவே குல தெய்வமும் அடங்கும். அந்த ஐந்து நிலைகளில் காணப்படும் ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கும். அவ்வளவு ஏன் துர்தேவதைகள் கூட அந்த அவதாரங்களில் உள்ளன. அவையும் சில காரண காரியங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. அது சரி அதென்ன குல தெய்வம் என்ற பெயர் ? ஐந்து நிலைகளில் உள்ள தெய்வீக ரூபங்களில் குல தெய்வம் என்பது என்ன பிரிவு??
பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.
பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது....
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத்துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில்
ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.