Saturday 21 December 2019

வீரபாண்டிய கட்டபொம்மன்

நாள் : 17.10.1799
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”
“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.
கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.


அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.
இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.
வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.
ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.
1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.
_______________________________________________
இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.
இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.
தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.
தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.
இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.
இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.
பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.
தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.
_______________________________________________


கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.
1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.
நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.
_______________________________________________
உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.
தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.

இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.

கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.
தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.
இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.
கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.
இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.

Monday 4 March 2019

அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்

வியட்நாம் ஜெனரல் வோ-குயன்-கியாப் தனது 102-வது வயதில் இராணுவ மருத்துவமனையில் உறவினர்கள் சூழ காலமானார். ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப்.

1954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து வரும் வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, பியன்-தியன்-பு என்ற இடத்தில் தனது படைகளை குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றன பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகள். அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை. பிரெஞ்சு படைகள் துரத்தி அடிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு தெற்கு வியட்நாம் அரசுக்கு ஆயுதங்கள் அளித்தும், நேரடியாக அமெரிக்கப் படைகளை அனுப்பியும், வியட்நாம் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தது. உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் யாராலும் எதிர் கொள்ள முடியாத அமெரிக்க அரசை, நெல் வயல்கள் நிறைந்த விவசாய நாடான பலவீனமான இராணுவம் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.ஆனால் அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் சென்ற வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்தோ சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு சவக் குழி வெட்டப்பட்டது.
1968-ம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க தளங்கள் பலவற்றில் ஒரே நேரத்தில் வியட்நாம் மக்கள் இராணுவமும் தெற்கு வியட்நாமின் வியட்காங் போராளிகளும் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் படைகளின் எதிர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் போர் முழுவதிலும் அமெரிக்க ஆயுதங்களால் கொல்லப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை 25 லட்சம், வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 58,000. கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள்  மீது அவிழ்த்து விட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. போரை எதிர்த்து நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு அடி பணிந்தும், போரில் தோல்வி ஏற்பட்டதாலும் அமெரிக்கா வியட்நாமிலிருந்து விலகிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.

அவரது மனைவியும், தந்தையும், சகோதரியும் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு அரசால் சிறையிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கொரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜப்பானிய சரணடைவுக்குப் பிறகு 1946-ம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசு அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன.இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளகர்த்தராக பணியாற்றிய ஜெனரல் கியாப் 1911-ம் ஆண்டில் வியட்நாமின் விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களால் கைது செய்யப்பட்டார். பிறகு ஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக் கொண்டே வரலாற்று ஆசிரியராக பணி புரிந்தார். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்த போது ஹோ-சி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.
ஆனால், வியட்நாம் மக்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் தனது காலனி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட வந்தது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது படை எடுத்தது.
பிரெஞ்சு படைகளுக்கு எதிரான தியன் பியன் பூ தாக்குதலிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான டெட் தாக்குதலிலும் வியட்நாம் மக்கள் படை எப்படி வெற்றி பெற முடிந்தது?
ஒரு பொருளாதார ரீதியில் பின்தங்கிய, பலவீனமான ராணுவத்தைக் கொண்ட நாட்டு மக்கள் தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் வலுப்படுத்தப்பட்ட நவீன இராணுவத்தை எதிர்த்து எப்படி தமது சுதந்திரத்தை மீட்க முடிந்தது?
வியட்நாம் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் கோட்பாட்டை வகுத்து நடைமுறைப்படுத்தி வியட்நாம் மக்களின் விடுதலைப் போரை வழி நடத்தினார் ஜெனரல் கியாப்.

“அவ்வாறு ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் யுத்தம் இராணுவ, அரசியல், மற்றும் பொருளாதார தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்” என்றார் ஜெனரல் கியாப். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வியட்நாம் மக்களின் போர், நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தது.எதிரியின் இராணுவ, பொருளாதார வலிமைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களை எதிர் கொண்டு தோற்கடிக்க அது போதாது. ஒரு நாட்டின் மக்கள் தமது சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டு போராடும் போது அவர்கள் எப்போதும் வெற்றியடைவது உறுதி.  உலகின் மிகப் பலமான பொருளாதார, இராணுவ சக்தி கூட தமது சர்வதேச உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களின் எதிர்ப்பை தகர்க்க முடியாது.
“போரில் வெற்றி பெற்றவர்கள் வியட்நாம் மக்கள், அமெரிக்க இராணுவம்  தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்பினார்கள். அமெரிக்க மக்கள் போரை விரும்பினார்களா? இல்லை, அவர்களும் அமைதியை விரும்பினார்கள். எனவே எங்கள் வெற்றி வியட்நாம் மக்களின் வெற்றி, அமெரிக்காவில் அமைதியை விரும்பிய மக்களின் வெற்றி.” என்றார் ஜெனரல் கியாப்.
என்ன விலை கொடுத்தாவது வியட்நாமை ஆக்கிரமிக்கத் துடித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்தான் தோல்வி அடைந்தார்கள்.
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராடி மண்டியிடச் செய்த தளபதி ஜெனரல் கியாப்புக்கு சிவப்பு வணக்கங்கள்.