இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது.
இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும்
திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது
பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை
எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை.
ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து
பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர்
தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப் படுகின்றது. நானும் கடல்
அழிவால் இலங்கை தனி தீவாக பிரிந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை
அது எப்பொழுது நடந்து இருக்கலாம் என்ற ஒரு ஆதார சிறு குறிப்பை உங்கள் முன்
வைத்து இந்த கட்டுரையை தொடர்கின்றேன்.
1898 இல் அத்திலாந்து சமுத்திரம் என்ற ஆய்வுநூல் எழுதிய மேலைத்தேச
ஆய்வாளர் பெர்டினண்ட் கித்டேல் குறிப்பிட்டுள்ள கருத்தின்படி 11481
ஆண்டுகளுக்கு முன்னம் மிகப்பெரிய கடல் அழிவு வந்தது அந்த கடல் அழிவின்
பின்னரே பல நாடுகள் புதிதாக உருவாகியது என்று அவர் கருத்தொன்றை முன்வைத்து
சென்று இருக்கின்றார். இதே கருத்தை பேரறிஞர் எலியட் என்பவரும் lost lemuria
/லொஸ்ட் லெமுரியா /என்ற நூலில் மேற்கோள் காட்டி இருக்கின்றார். எனவே
இரண்டும் சமகாலத்தில் ஏற்பட்ட ஒரே மிக பெரும் கடல் அழிவாக இருக்கலாம்.
அத்திலாந்து சமுத்திரம் எழுதியவரின் கருத்தின்படி எனது கணிப்பு
இன்றைக்கு/2013/ ,,,11596 வருடங்களுக்கு முன்னம் அந்த கடல் அழிவு
வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும்
முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தும் இரு பெரும்
கண்டங்களான அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு.
இந்த கடல் அழிவில் இந்த கண்டங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்கிப்போக
உலகில் பல புதிய சிறிய நாடுகள் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறே
இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில் இருந்து தனியாக பிரிந்தது என்று
கருதலாம். அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும் குமரிகண்ட
பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம்.
இதுவே புராணங்கள் கூறும் ஊழி காலத்தில் ஏற்பட்ட பெரும் கடல் அழிவு
என்றும் நாம் கூறலாம். இன்றைய யதார்த்தவாதிகளும் ஆன்மீக கருத்துக்களை
எதிர்ப்பவர்களும் புராணங்கள் இதிகாசங்கள் முழுமையான புனைவுகள் என்று
கடினமான எதிர்கருத்துக்களை முன்வைக்கும் அதேவேளை நாசா விஞ்ஞானிகளும்
மேலைத்தேச ஆய்வாளர்களும் புராணங்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அதில்
உள்ள கருத்துக்களை ஆய்வு செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
புராண வரலாற்றில் முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும்
சண்டை நடந்ததாகவும் அதில் மேரு மலையின் சிகரம் வாயுபகவானால் பெயர்க்கபட்டு
கடலில் வீசப்பட்டதாகவும் கடலில் வீசப்பட்ட இடத்தில் இலங்கை தோன்றியதாகவும்
புராணம் கூறுகின்றது. பெளத்தறிவு ரீதியாக எனது பார்வையில் சிந்தித்து
பார்க்கையில் வாயு பகவான் காற்றோடு சம்பந்தப் பட்டவர், ஆதிசேஷன் நாகலோகத்து
கடலோடு சம்பந்தப்பட்டவர்.
எனவே காற்றும் கடலும் அகோர தாண்டவம் ஆடி குமரி கண்டத்தில் இருந்த
மகாமேரு மலை பெயர்க்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய பகுதியின் மிச்சம்
இலங்கையாக இருக்கலாம். மகேந்திர மலை, மணி மலை என்பன மிகப்பெரிய மகாமேரு
மலையின் தொடர் மலையின் சிகரங்களாக இருக்கலாம்.
புராணங்கள் கூறும் தென்
கைலாயம் என்பதும் இலங்கை தான் என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்று.
எனவே இந்த நிகழ்வு நடந்தது ஆய்வாளர்கள் குறிப்பிடும் கூற்றுப்படி எனது
/2013/கணிப்பில் இன்றைக்கு கி மு 9583 வருடங்களுக்கு முன் நடந்து
இருக்கலாம்.
கி மு 9583 இல் உருவாகி சூரன் ராவணன் ஆண்ட இலங்கையில் சிறு தீவுகள்
இருந்ததாக வரலாற்று குறிப்புக்கள் இல்லை. இலங்கையின் வரலாற்றை முதல்
முதலில் கந்த புராண வரலாற்றுக் குறிப்பில் தான் அறியப்படுகின்றது. பலர் இவை
கற்பனை என்று வாதிட்டாலும், கந்தபுராணத்தை ஆய்வுசெய்து விளக்கவுரைகள்
எழுதிய தமிழ் பண்டிதர்கள் அந்த கதையில் பல உண்மைகள் இருப்பதாகவே இதுவரை
கருத்து கூறி இருக்கின்றார்கள்.
அந்தவகையில் அவர்கள் கருத்துபடி கந்தபுராண வரலாறு நடந்ததாக கருதப்படும்
காலம் அண்ணளவாக, கி மு 9000 ஆக இருக்கலாம் என்று பண்டிதமணி சின்னதம்பி,
பண்டிதமணி கணபதிபிள்ளை, பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையர் போன்றவர்கள்
தங்கள் வரலாற்று குறிப்புக்களில் கூறி இருக்கின்றார்கள். இலங்கை என்று ஒரு
தனிநாடும் முதன் முதலில் கந்தபுராண வரலாறு நடந்ததாக கூறப்படும் காலத்தில்
தான் வருகின்றது. சூரன் அரசாண்டதாக கூறப்படும் இலங்கையின் தலை நகராக
மகேந்திர மலை தான் குறிப்பிடப்படுகின்றது.
சூரனுடைய மனைவியாக வரும் பதும கோமளை, மணிமலை நாகர்குல இளவரசி என்றே
கூறப்படுகின்றது. மணிமலை வடகடலில் மூழ்கிய ஒரு மலையாக வரலாற்றில்
கருதப்படுகின்றது அப்படியானால் ஈழத்தில் வட பகுதியை நாகர்கள் ஆண்டார்கள்
என்ற கருத்தும் இங்கே முன்வைக்கப் படுகின்றது. ஆனால் இந்த மகேந்திரமலை
இன்று இல்லை அது அம்பாந்தோட்டைக்கு கீழ் கடலில் மூழ்கிவிட்டதாக
கருதப்படுகின்றது. மணிமலை என்ற ஒரு மலை இன்றைய கீரிமலை சார்ந்த பிரதேசம்
என்று சிலர் கருத்து கூறி இருக்கின்றார்கள்.
உண்மையில் மணிமலையின் எச்சமாக கீரிமலை இருக்கலாம். அதேவேளை இன்றைய
நயினாதீவின் தென்கிழக்கு முனையின் உயரமான நிலப்பகுதி பகுதி மலை அடி என்றே
காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. அதை அண்மித்த காட்டு பகுதி
மலையன்காடு என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது. இதையும் ஒரு சிறு குறிப்பாக
முன்வைக்கின்றேன்.
அத்தோடு இந்த மலை அடியை அண்மித்த அடுத்த தீவான
புங்குடுதீவை கந்தபுராணத்தில் கிரவுஞ்சம் என்ற பெயரில் அழைகின்றார்கள்
அதுவும் மலை சம்பந்தபட்ட ஒரு பெயராகும். எனவே மணிமலையும் நீண்டதொரு மலைத்
தொடராக நாகநாட்டில் இருந்து இருக்கலாம்.
அடுத்து சங்ககால வரலாறுகளில் யாழ் குடாநாடு மணிபல்லவம் என்று
அழைக்கப்பட்டது என்று கருத்துக்கள் இருக்கிறது. மணிபல்லவம் என்பதற்கு
சங்ககால வியாபாரிகளுக்கு நவமணிகள் கிடைத்த இடம் என்பதும் ஒரு காரண பெயர்
என்றும் குறிப்பிடுகின்றார்கள். அதேவேளை மணிமேகலை காப்பியம் சொல்லும்
மணிபல்லவம் நயினாதீவு தான் என்பதில் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது. அதை
இந்த கட்டுரையில் யாழ் தீவுகள் பிரிந்ததாக நான் முன்வைக்க போகும்
கால்பகுதி மேலும் நிரூபிகின்றது.
அதனால் தீவுகள் பிரிந்தபின்னர் எழுந்த இலக்கியங்களில் வரும் மணிபல்லவம்
நயினாதீவு என்று கொள்ளலாம். ஆனால் நாகதீபம் என்று நாகர்கள் ஆண்ட இடம்
ஈழத்தின் வடபகுதி முழுவதையும் குறிக்கும். தீவுகள் பிரிவதற்கு முன்னர்
எங்காவது இலக்கியத்தில் மணிபல்லவம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு
இருந்தால் அந்த முழுமையான வரலாறும் இன்றைய நயினாதீவுக்கு சொந்தமானது அல்ல.
ஆனால் தீவுகள் பிரிந்ததாக நான் மேற்கோள் காட்டப்படும் காலத்துக்கு பின்னரான
இலக்கியங்களில் தான் அனேகமாக மணிபல்லவம் என்ற சொல் பாவிக்கப்பட்டு
இருக்கிறது என்பது இதுவரை அறிந்த குறிப்புகள் மூலம் உறுதியாகின்றது.
அதேவேளை இன்னொரு முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டும் அதாவது பல்லவர்கள்
தென்னிந்தியாவுக்கு குறிப்பாக நான் இங்கு தீவுகள் பிரிந்ததாக முன்வைக்கப்
போகும் காலத்தில் தான் சென்றார்கள் என்பதால் இந்த கடல் அழிவால்
பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்கள் இன்றைய யாழ் தீவு மக்கள் தான் என்று
வரலாறு கூறுவதால் அந்த பல்லவர்கள் தீவு பகுதி மக்களாகவும் கடல் அழிவால்
பாதிக்கப்பட்ட யாழ் கரையோர பகுதி மக்களாக இருக்கலாம்.
கந்தபுராண காலத்திற்கு முற்பட்ட காலத்தில் நாகலோகத்தோடு இணைந்த
இலங்கையை ஆதிஷேசன், வாசுகி, கார்த்த வீரியார்சுணன் ஆண்ட நாடும் கந்த புராண
காலத்தில் , சூரன் மற்றும் அவன் தம்பிமார் , முருகன் ஆண்ட இலங்கையும் ,
அதற்கு பிற்பட்ட காலத்தில் விஸ்வகர்மா, மயன், சுமாலி, குபேரன், இராவணன்,
வீடணன் ஆண்ட இலங்கையும், இன்றைய இலங்கையை விட மிக பெரிய நிலப்பரப்பையும்
பல்வேறு மலைகளையும், நதிகளையும் கொண்ட இலங்கை என்று சொல்லப்படுகின்றது.
இந்திய வடநாட்டில் பாய்ந்தோடும் நதிகள் கூட ஈழ நாடுவரை நீண்டு ஓடி வந்து
கலந்ததாக வரலாறுகள் இருக்கிறது.
இலங்கையின் பூகோள அமைப்பையும் சமுத்திரங்களால் தாக்கங்கள் ஏற்படக் கூடிய
நிலையில் அமைந்து இருப்பதையும் பின்வந்த கடல்கோள்கள் அவற்றை உறுதிப்
படுத்துவதையும் வைத்து அன்றைய இலங்கை மிகபெரியது என்பதை உண்மை என்று
நம்பலாம். இந்த வரலாற்றுக் காலங்களிலும் இலங்கையில் வடபகுதியில் இருந்த
சிறு தீவுகள் பற்றிய குறிப்புக்கள் எங்கும் இல்லை. அதனால் அந்த காலத்தில்
இன்றைய வடபகுதி சப்த தீவுகளும் ஏனைய சிறு தீவுகளும் யாழ்ப்பாண நகரோடு
இணைந்து பெரு நகரங்களாக இருந்து இருக்கிறது என்றே கருதப்படுகின்றது .
இதற்கு ஆதாரமாக கந்தபுராணத்தில் சப்த தீவுகளுக்கும் தீவுகள் என்ற பெயர்
இல்லாமல் அந்த தீவு இருக்கின்ற இடங்களுக்கு நகரத்துக்கு உரிய சிறப்பு
பெயர்களே சூட்டபட்டுள்ளது. அந்தவகையில், இன்றைய வேலணை தீவு சூசை என்றும்,
புங்குடுதீவு, கிரவுஞ்சம் என்றும், நயினாதீவு சம்பு என்றும், காரைதீவு
சாகம் என்றும், நெடும்தீவு புட்கரம் என்றும், அனலை தீவு கோமேதகம் என்றும்,
எழுவை தீவு இலவு என்றும் கூறப்பட்டு உள்ளது. ஏனைய மண்டைதீவு, கச்சைதீவு
பற்றிய இடங்களுக்கு எந்த பெயரும் குறிப்பிடப் படவில்லை.
இன்றைய சப்த தீவுகளும் ஏனைய தீவுகளும் எப்பொழுது எவ்வாறு உருவாகியது
என்பதை பற்றி ஆராய்து பார்ப்பதற்கு காலத்துக்கு காலம் வந்ததாக கருதப்படும்
கடல்கோள்களின் பாதிப்புகளையும் அதனோடு தொடர்புபட்ட வரலாறுகளில் எமது
தீவுகளின் பெயர் தீவாக வருகின்றதா என்பதையும் தொடர்ந்தும் ஆராய்ந்து
பார்ப்போம். கி.மு 6087 இல் இன்னொரு மிகப்பெரிய கடல் கோள் ஏற்பட்டதாக
கருதப்படுகின்றது இந்த அடல் அழிவில் தான் சூரன், முருகன், ஆதிசேடன்,
குபேரன், இராவணன் ,,, பின் வீடணன் பரம்பரை ஆண்ட மிகப்பெரிய இலங்கையின்
பெரும் பகுதி அழிந்ததாக கருத இடம் உண்டு . இந்த கடல் அழிவில் மகேந்திர மலை,
மணி மலை போன்ற மலைகள் அழிந்தும் பல நதிகள் கடலோடு முழுமையாக சங்கமமாகியும்
இருக்கலாம். இந்த கடல் அழிவின்போதே குமரி கண்டத்தின் எஞ்சிய இன்றைய
பகுதிகளை விட ஏனையவை முழுமையாக கடலில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.
இந்த கடல் அழிவின் போது யாழ் தீவுகள் யாழில் இருந்து பிரிந்திருக்குமா
என்று பல்வேறு வழிகளில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய
ஆபத்தான சமுத்திரங்கள் இணைந்து கோர தாண்டவம் ஆடிய மிக பெரும் கடல் அழிவாகவே
ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். பெரும் மலைகளை கூட பெயர்த்து எடுத்த
கடல்அழிவு இந்த அழிவில் சிறுதீவுகள் சார்ந்த இடப்பரப்பு உருவாக்கி
இருக்குமா .. என்ற சந்தேகம் எழும் அதேவேளை, அதற்கு பின் வந்த வரலாற்று
நிகழ்வுகளிலும் குறிப்புக்களிலும் இந்த தீவுகள் தனித்தனி தனித்துவமான
தீவுகளாக வரலாறுகளில் இல்லை .
அதற்கு பின் கி மு 3102 மாசி 17 இல் கலியுகம் ஆரம்பம் என்று வரலாற்றில்
வருகின்றது. இதுவே சிந்துவெளி காலத்தில் ஆரம்பம் ஆகவும் கருதப்படுகின்றது.
இந்த காலத்தில் தான் துவாரகை புகழ்பெற்று விளங்கிய காலம். 3100 /1900,
இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கடல்கோள் வந்ததாகவும் ஆனால் இந்த
கடல்கோளில் மொஹெஞ்சதாரோவின் பகுதிகள், மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின்
பகுதிகள், லோத்தல் என்ற இடத்தின் பகுதிகளே அனேகமாக அழிந்தது. இதைத்தான்
சிந்துவெளி கடல்கோள் என்று அழைப்பார்கள். இந்த அழிவின் பொழுது துவாரகை
அழிந்து இருக்கலாம். இந்த துவாரகையின் தடயங்களை ஆதாரங்களை இந்திய அரசு
தற்பொழுது ஆய்வுசெய்து உறுதிப்படுத்தி உள்ளது. ///அதை சிலர் தவறாக
குமரிக்கண்ட ஆய்வு என்று பரப்புரை செய்கின்றார்கள்/// இந்த அழிவின்போது
மிகப்பெரிய பூமி அதிர்வும் ஏற்பட்டதால் சரஸ்வதி நதி நிலவெடிப்புக்குள்
முழுமையாக அமிழ்ந்துபோனது. ஆனால் இந்த அழிவுகள் மேற்கு இந்திய பகுதிகளையே
அதிகம் தாக்கியதாகவும், தென்னிந்தியாவையும் ஈழத்தையும் பெரிதாக
பாதிக்கவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அதனால் இந்த கடல்
அழிவிலும் ஈழத்தில் வடபகுதி தீவுகள் உருவாக சாத்தியம் இல்லை .
இதே சமகாலத்தில் கி மு 2387 இல் தென்னிந்தியாவையும் ஈழத்தையும் உலுப்பிய
இன்னொரு கடல் அழிவு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த கடல்
அழிவின் போது தான் தென்மதுரையும் கபாட புரமும் அழிந்ததாக கூறுகின்றார்கள்.
கபாட புரத்தையும் ஈழத்தையும் இந்து சமுத்திர நீர் பிரித்ததாகவும்
சொல்கின்றார்கள். இதில் கபாடபுரம் முழுமையாக அழிந்ததாக கூறப்படுகின்றது.
இங்கு இயங்கிய தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்களும் பங்கு கொண்டார்கள் என்ற
கருத்துக்களும் இருக்கிறது, அதனால் ஈழத்துக்கும் கபாடபுரத்துக்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகின்றது. இந்த கடல் அழிவில்
தான் ஈழத்தின் வடபகுதி தீவுகள் யாழில் இருந்து பிரிந்து இருக்குமா என்று
சிந்திக்கவே தோன்றுகின்றது. கபாடபுரம் ஈழத்துக்கும் இந்தியாவுக்கும்
நடுவில் இருந்து இருக்கலாம். இது இன்னும் பல்வேறுபட்ட ஆய்வுக்கு உட்படுத்த
வேண்டிய விடயமாகவே நான் கருதுகின்றேன். வரலாற்று மாணவர்கள் புதிய
ஆய்வாளர்கள் இதற்கான தகுந்த நிறுவுதலை ஆதாரங்களை முன்வைத்தால் அந்த கருத்தை
ஏற்றுகொள்ளலாம். கபாடபுர தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்கள் பலர் புலவர்களாய்
இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாறுகள் கூறுகின்றது. கபாடபுரத்தில் சங்கம்
வளர்த்த புலவர்கள் எழுதிய பாடல்கள் குறிப்புக்களிலும் அவர்களுக்குப்
பின்வந்த கடை சங்க ஆரம்பகால புலவர்கள் குறிப்புக்களிலும் யாழ் வடபகுதி
தீவுகள் யாழ்ப்பாணதோடு இணைந்த வரலாற்று குறிப்புக்களையே காணக்கூடியதாக
இருக்கிறது.
அடுத்த மிகபெரிய கடல்கோளாக கருதப்படுவது கி மு 200 /300 அளவில்
தொண்டமான் இளம்திரையன் சிறுவனாய் ஈழ நாட்டில் இருந்து சோழநாட்டுக்கு
புறப்பட்டு சென்ற பொழுது ஏற்பட்டதாக கருதப்படுகின்றது. இந்த கடல் அழிவு
தேவநம்பிய தீசன் ஆட்சி இறுதி காலத்தில் நடந்ததாக பல புனைவுகள் அடங்கிய
மகாவம்சமும் குறிப்பிடுகின்றது. இந்த கடல் அழிவு பெரும்பாலும் ஈழத்தையே
தாக்கியது. இந்த கடல்கோளின் பின்தான் தொண்டமானாறு என்ற பெயர் வந்ததாகவும்
வரலாறு இருக்கிறது. இந்த கடல்கோள் யாழை பெரிதும் தாக்கி அதன் பெரும்
இடப்பரப்பை கடல் ஆட்கொண்டதாகவும் வரலாறுகள் வருகின்றது. இந்த கடல் அழிவில்
புகழ் பெற்று இருந்த துறைமுக நகரமாய் விளங்கிய சம்பு மாநகர் சிதைந்து அதன்
துறைமுகம் பெரிதும் அழிவடைந்து தீவாகி மணிபல்லவ தீவு என்ற பெயரானது
என்பதையும் முன்வைகின்றேன்.
இந்த கடல்கோளின் பொழுதுதான் ஈழத்து வடபகுதி தீவுகளான வேலணை தீவு,
புங்குடுதீவு, நயினாதீவு, நெடும்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு,
காரைதீவு , கச்சை தீவு ஆகிய தீவுகள் பிரிந்து இருக்கலாம் என்பது எனது
கருதுகோள். எமது பல வரலாற்று நூலாசிரியர்கள் /சப்த /ஏழுதீவுகள் என்ற
கருத்தை கொண்டு இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் ஏழு என்று எழுதியவர்கள்
தவறாக எழுதி இருக்க மாட்டார்கள் என்பதால் முதல் ஏழாக பிரிந்து பின்னர்
மண்டை தீவு எட்டாவது தனித் தீவாக பிரிந்து இருக்கலாம். கடல் பிரிக்கும் தூர
அளவுகளை வைத்து பார்க்கும் பொழுது இது சாத்தியமானது. கச்சை தீவு 1974 வரை
இந்தியாவின் இராமநாதபுரம் சேதிபதியின் சொத்தாக இருந்ததால் யாழ்தீவுகள்
கணக்கில் வராமல் இருந்து இருக்கலாம். எனவே இன்றும் தீவுகள் ஏழு என்று
தொடர்ந்தும் நூல்களில் எழுதுவதை தவிர்த்து கண்முன்னே இருக்கும்
மண்டைதீவையும் 1974 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையின்
சொத்தாகி இருக்கும் கச்சை தீவையும் சேர்த்து தீவுகள் 9 ஆக எழுத வேண்டும்
என்ற கருத்தை எதிர்காலத்துக்கு முன்வைக்கின்றேன். ஊர தீவு , பால தீவு,
காக்கைதீவு போன்ற நிர்வாக அலகுகள் இல்லாத மிக சிறு தீவுகளை அண்மையில் உள்ள
நிர்வாக கட்டமைப்பு உள்ள தீவுகளோடு இணைத்து கருத்துக்களை எழுதலாம். எனவே
இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து அந்த முத்துக்கு புகழ் சேர்க்கும்
நவமணிகள் யாழ் தீவுகள் என்று அழைக்கப்படும் நவதீவுகள் என்ற கருத்தை
உறுதியாக முன்வைகின்றேன்.
நான் இந்த கட்டுரையில் முன்வைத்து இருக்கும் கருத்துக்களை
எதிர்காலத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவி வரலாற்று மாணவர்கள் ஆய்வாளர்கள்
உறுதிப் படுத்துவார்கள் ஆனால் அதற்கு நான் தலை வணங்குவேன் என்பதையும்
இன்றே எழுதி வைக்கின்றேன். நன்றி வணக்கம்..