மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்…
மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.
மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.
தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு ‘கந்தழி’ என்று பெயர்.
தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, ‘நடுகல்’ வழிபாடு என்று பெயர்.
இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு.
கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. “தவ்வை” என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.
யார் இந்த மூதேவி ? அவளின் வரலாறு என்ன ?
நம் முது தந்தையரை எப்படி ‘மூதாதையர்’ என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு ‘மூதேவி’ என்ற பெயர் வந்தது.
அக்காவைக் குறிக்கும் சொல்லான ‘அக்கை’ என்கிற வார்த்தை எப்படி ‘தமக்கை’ ஆனதோ, அதேபோல் ‘அவ்வை’ என்ற வார்த்தை ‘தவ்வை’ ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான்!
உரத்தின் அடையாளம் ‘தவ்வை’. நெற்கதிர்களின் அடையாளம் ‘திருமகள்’. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம்.
இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை.
அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.
தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், ‘தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய’தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன.
‘சேட்டை’ மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன.
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 – ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம், சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.
தவ்வை
(பட உதவி : விக்கிபீடியா)
புராணங்களில் தவ்வை பற்றி :
சைவ – வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது.
இது பண்டைய தமிழரின், உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன் மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தவ்வை வழிபாடு :
பல கோயில்களில் ‘ஜேஸ்டா தேவி’ என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள்.
காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது.
திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது.
சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு.
வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன.
தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன.
தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன.
பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து ‘தவ்வை’யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர்.
தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.
தவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். “வளத்தின் மூல வடிவமே ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம்.
தமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்” என்கிறார் பரமசிவம்.
குலதெய்வ வழிபாடு
தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம்.
அதேபோல், ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும்.
கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது
நன்றி;
சுமதி_படைப்பு.