உலகின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் விடும் அடர்ந்த காடு..
அமேசான் காடுகளைவிடப் பழமையானவை என்பதே, போர்னியோ காட்டின் பெருமைக்குச் சான்று. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு காடு நிறைந்த இத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
பல்லுயிர்ச் செழிப்புமிக்க இம்மழைக்காட்டில் காணப்படும் 222 பாலூட்டிகளில் 44 பாலூட்டிகள் ஓரிட வாழ்விகள் (Endemic). போர்னியோவைத் தவிர உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவற்றைக் காண முடியாது. இதுபோல் 420 வகைப் பறவைகளில் 37 வகைப் பறவைகளும், 100 நீர்நில வாழ்வன, 394 மீன் வகைகளில் 19 வகை ஓரிட வாழ்விகள். இங்குள்ள 15,000 வகைத் தாவரங்களுள் 6,000 வகைகள் இங்கு மட்டுமே காணக்கூடியவை.
ஒரு பிசின் வகை மரமொன்றில் மட்டும் ஆயிரம் வகை பூச்சியினங்கள் காணப்படுகின்றன.
உலகிலேயே நீளமான பூச்சியாகப் பதிவாகியுள்ள ‘சான் மெகாஸ்டிக்’ எனப்படும் அரை மீட்டருக்கு மேல் (56.7 செ.மீ) நீளமுள்ள குச்சிப்பூச்சி இக்காட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காட்டின் தரைப் பகுதியில்தான், உலகின் மிகப் பெரிய மலரான ரஃப்ளேசியா மலர்கிறது.
தொன்மைக்காலப் பூச்சியை உண்ணும் ஒரே பாலூட்டி வகையான துபையா எனும் விலங்கும் உலகில் இங்கு மட்டுமே வாழ்கிறது. ‘பிக்மி யானை’ என்றழைக்கப்படும் உலகின் குள்ளமான யானை, இங்குதான் காணப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் வௌவாலுக்கு முந்தைய இனமான ‘பறக்கும் லீமர்’ என்னும் உயிரினமும், உலகில் காணப்படும் ஒரே இடம் போர்னியோதான். போர்னியோவின் பெருமைகளைப் பட்டியலிட்டால், இடம் பத்தாது.
1950-ல் முழுவதும் காடாக இருந்த, உலகிலேயே ஏராளமான தனித்தன்மை மிக்க உயிரினங்களைக் கொண்டிருந்த போர்னியோ காடுதான் இன்றைக்கு உலகிலேயே அதிவிரைவாக, கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருகிறது.
வளம்மிக்க இந்தக் காட்டை மரம் வெட்டும் நிறுவனங்கள் சூறையாடிவருகின்றன. பல பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பாமாயில் எண்ணெய்க்காக, இக்காட்டை அழித்து பாமாயிலைத் தரும் செம்பனைத் தோட்டங்களை உருவாக்கிவருகின்றன கார்பரேட் நிறுவனங்கள்.
போர்னியோ காட்டின் கடைசி மூச்சு எப்போது நிற்கும் என்று தெரியவில்லை.