ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அடையாளத்தை அழி, என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.
தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.
70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.
யார் இந்த சிறில் மெத்தியு
அந்த பாதையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சிறில் மெத்தியு. இலங்கையின் வரலாற்றில் பல இனவாதிகளை உருவாக்கிய முக்கிய கோட்டையாக அன்றிலிருந்து இன்றுவரை திகழ்வது களனி பிரதேசம். அந்தத் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் சிறில் மெத்தியு. 1977 தேர்தலில் களனி தொகுதி மக்களால் வெற்றியடையச் செய்யப்பட்டவர் சிறில் மெத்தியு. அதே தொகுதியைச் சேர்ந்தவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜே.ஆர் சிறில் மெத்தியுவுக்கு தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராக நியமித்தார். 1980ஆம் ஆண்டு சிறில் மெத்தியு தனது அதிகார பலத்துடன் வடக்கில் அகழ்வாராய்ச்சிகளை விஸ்தரிப்பதற்காக அதிகாரிகளை அனுப்பி தனது வழிகாட்டலின் பேரில் மேற்கொண்டார்.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மூடை – குச்சவெளி பிரதேசத்தில் “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டுவருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்தமதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும் ஆனால் யாழ் – சைவ – தமிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளையே அப்படி காண முடிகிறது.
தமிழர்களுக்கு உரிமை கோருவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. அது பயங்கரவாதக் கோரிக்கைகளே என்று நிறுவும் வகையில் அவர் நூல்களை எழுதி பிரசுரித்தார். “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? - 1980), “சிஹளுனி! புதுசசுன பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) என்கிற நூல்கள் மிகவும் மோசமான இனவாத நூல்கள். தன்னை தீவிர சிங்கள பௌத்தனாக ஆக்கிக்கொண்ட சிறில் மெத்தியு தமிழ் விரோத போக்கையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொண்டிருந்தவர்.
யாழ் நூலக எரிப்புக்கு சிறில் மெத்தியு மட்டும் பொறுப்பில்லை. அதற்கு ஏதுவான இனவாத அலை ஏற்கெனவே வளர்தெடுக்கப்பட்டு, நிருவனமயப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் சிறில் மெத்தியு அந்த உடனடி நிலைமைகளுக்கு தலைமை கொடுத்தார் என்பது வெளிப்படை. இந்த காலத்தில் சிறில் மெத்தியு பாராளுமன்றத்தில் சிறில் மெத்தியு ஆற்றிய உரைகளில் இனவாத விசர்நாயொன்றின் கர்ஜனைகளைக் காண முடியும்.
சிறில் மெத்தியுவின் இந்தப் போக்கை ஐ.தே.க அரசாங்கமும் ஜே.ஆறும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்று வரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது... கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” அவர் ஆத்திரத்துடன் உரையாற்றினார்.
வடக்கில் எழுச்சியுற்ற தமிழர் உரிமை இயக்கங்களை எதிர்கொள்ள இப்படியான சக்திகள் சிங்களத் தரப்புக்கு தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. குறிப்பாக அரசாங்கத்துக்குள்.
ஐ.தே.வின் மானப் பிரச்சினைக்கு விலை
வடக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 77 கலவரம் நிகழ்ந்து அதன் மீதான விசாரணையும் கூட அந்த சூட்டைத் தணிய வைக்கவில்லை. மாவட்ட சபைகள் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு எப்பெரும் விலையைக் கொடுத்தாவது பல ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று களம் இறங்கியது ஐ.தே.க. அருவருக்கத்தக்க தேர்தல் மோசடிகளில் இறங்கியது பற்றி பல சர்வதேச அறிக்கைகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன. வாக்குப் பேட்டிகள் சூறையாடப்பட்டன. பொலிசாரின் கெடுபிடிகள் சாமான்ய மக்களுக்கு அதிரித்திருந்தன.
இந்த நிலையில் ஐ.தே.க நியமித்திருந்த பிரதான வேட்பாளரான தியாகராஜா தமிழ் இயக்கங்களால் குறி வைக்கப்பட்டிருந்தார். அவர் மே 24 அன்று அவர் கொல்லப்பட்டார். ஐ.தே.கவுக்கு இது பேரிடியாக இருந்தது. வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போவதை உணர்ந்த அவர்கள் இதனை தமக்கேதிறான் சவாலாகவே பார்த்தனர்.
தேர்தல் பணிகளை நேரில் நின்று கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும், மெத்தியுவுக்கு நெருக்கமான அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதைவிட ஏற்கெனவே அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து 500 பொலிசாரிக் கொண்ட ஒரு பெரும்படையும் அனுப்பப்பட்டது. ஒரு பெரும் அசம்பாவிதத்துக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புமிக்கதாக இருந்தது. மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோவிலடியில். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.
அரச பயங்கரவாதம்
சொற்ப நேரத்தில் அங்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தினர். வீதி வெறிச்சோடியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தினர். 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர்.
பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர் தப்பியோடினர். ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் கோபாலரத்தினம் கொடூரமாக தாக்கப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதிக்கு இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலைகளும் உடைத்து துவம்சம் செய்யப்பட்டன.
இந்த ஆராஜகத்தை யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் இருந்தபடி இயக்கிக் கொண்டிருந்தார்கள். சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க தலைமையிலான குழு. ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காடையர்களும் தம் பங்குக்கு கொள்ளைகளிலும், நாசம் செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவசரகால சட்டம், அமுலில் தான் இருந்தது. சகலதும் முடிந்த பின்னர் தான் காலம் கடந்து ஜூன் 2அன்று ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தது அரசாங்கம். அந்த சட்ட நடவடிக்கைகள் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாமரர்களுக்கு இழப்பையும் தான் தந்தது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரச பயங்கரவாதம் இந்த சட்டங்களின் மூலம் மேலதிக அதிகாரங்களுடனும், வசதிகளுடனும் மக்களை கட்டிப்போட்டு சூறையாடியது. அவர்களின் சொத்துக்களை அளித்து சின்னாபின்னமாக்கியது.
இரவிரவாக நடந்த இந்தக் கொடுமைகளுக்கு இடைவேளை கொடுக்கவில்லை. அவர்களின் நாசகர தாகமும் அடங்கவில்லை. மறுநாளும் தொடர்ந்தது ஜூன் 1 அவர்கள் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த 97,000க்கும் மேற்பட்ட நூல்களையும், காலங்காலமாக பாதுக்காக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளையும், பல கையெழுத்து மூலப் பிதிகளையும் சேர்த்து கொளுத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஒரேயொரு மூலப் பிரதியும் அழிக்கப்பட்டவற்றுக்கு உதாரணம்.
இரவிரவாக தீயில் பொசுங்கிக்கொண்டிருந்த அந்த புலமைச் சொத்துக்களுடன், பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கிய அந்த நூலகம் எரிந்துகொண்டிருந்ததை யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்துறந்தார்.
இலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.
No comments:
Post a Comment