இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!
இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா? அது எப்படி? “ என்றுஅவசரமாகக் கேட்டார்! அவரிடம் நான் சொன்னேன்! ” பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கம் நடத்தினார் தெரியுமா? அது ஃபிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்கு நிகராக இருந்தது!” இப்போது நண்பருக்கு மேலும் மேலும் ஆச்சரியம்! “ எப்படி? எப்படி?” என்று ஆர்வமாகக் கேட்டார்! அவருக்கு நான் சொன்னவற்றை கீழே தொகுப்பாகத் தருகிறேன்!
வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை!
அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது! ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்!
குனிந்துவிட்டோம் ஆயினும், நிமிர்ந்தோம் என்பதும் வரலாறு
மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்!
இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!
இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!
கலைகள் – வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்!
வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்! “ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்!
உலகில் அழகான தெரு
அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்!
வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!
வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே!
வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்!
ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்…., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்!
இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய?
தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்!
பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது!
இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியா தான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது! ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்!
Paris C Fou என்பது இங்கு மிகவும் பிரபலமான நிகழ்ச்சி! அதனை அழகாகத் தொகுப்பவர் ஃபிரெஞ்சு – இத்தலியன் கலப்பு பெண்ணான மேரி !
ஒவ்வொரு முறையும், ஃபிரெஞ்சு இராணுவ வீரன் களப்பலியான செய்தி வரும்போதெல்லாம் உள்ளம் துடிக்கும்! யாரென்றே தெரியாத அந்த வீரனுக்கு மனதுக்குள் வீரவணக்கம் செலுத்துவேன்! “ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி” பாடலை மனதுக்குள் உச்சரிப்பேன்! இவையெல்லாம் இயல்பாகவே நடந்துவிடுகிறது!
1940 களில் ஹிட்லரின் படைகள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த போது, ஃபிரெஞ்சுத் தளபதி சா து கோல், லண்டனுக்குப் போய், நாடுகடந்த ஃபிரெஞ்சு அரசை உருவாக்கினார்! அதைத்தான் இன்று தமிழனும் செய்கிறான்! ஆகவே ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தமிழனுக்கும் ஈழப்பற்று வருவது மிக மிக இயல்புதான்!
நாமாக மறக்க நினைத்தாலும், இங்கு வந்த பின்னர் பிரபாகரனையும், தமிழீழத்தையும் இங்கு மறக்கவே முடிவதில்லை! “ புலம்பெயர் தமிழர்கள் யுத்த வெறியர்கள்!” என்று யார் திட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை! இருந்துவிட்டுப் போகிறோம்!
இங்கு மறக்கக் கூடிய சூழல் இல்லை! அதனால் கத்துகிறோம்! அங்கு நினைக்கக் கூடிய சூழல் இல்லை! திட்டுகிறீர்கள்! என்ன செய்ய?
ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில்,
ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்!
புரட்சி எப்.எம் இற்காக மாத்தியோசி மணி
பிற் குறிப்பு: மேலும் சில குறிப்புக்கள் / தகவல்கள்
*ஆயப் பகுதி என்று ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தார்கள். இதன் மூலம் வரி, தீர்வை விலக்கு போன்றவற்றினைப் புலிகள் நிர்வகித்தார்கள். புலிகள் பகுதிக்குள் இணைய வசதி, மின்சார வசதி வந்த பின்னர் இந்த ஆயப் பகுதிக்கு என்றே தனியான ஓர் இணையம் உருவாக்கி உலகெங்கும் கொண்டு சென்றார்கள்.
*அகதிகளுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் உதவுவதற்கு என்று புலத் தமிழ் உள்ளங்களின் உதவியோடு இயங்கும் வகையில் பிரபாகரன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினைக் கட்டியெழுப்பினார்.
இந்தப் புனர்வாழ்வுக் கழகத்திற்குச் சொந்தமான 400 மில்லியன் கோடி ரூபாவினை இலங்கை அரசு 2006ம் ஆண்டில் கையகப்படுத்தியிருந்தது.
*படகுகளை வடிவமைக்க, எம் தேசத்தின் கடற் தொழிலை விரிவாக்க வெளி நாட்டு உதவியுடன் படகு கட்டுமானத் துறையினை உருவாக்கியிருந்தார் பிரபாகரன். இது 2002 இல் உருவாக்கபப்ட்டது.
*வெளிநாட்டில் உள்ள தமிழ் அன்பர் ஒருவரின் உதவியுடன் முதன் முதலாக பசுப் பாலைச் செயற்கை முறையில் இயந்திரங்களின் உதவியுடன் எடுக்கும் முறையினை உருவாக்கினார்கள். பசுப்பால் பதனிடுதல், பாக்கட்டில் அடைத்து பாலை விற்றல் ஆகியவை இம் முறை மூலம் செயற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனமும் கிளிநொச்சியில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டது. பெயர் ஞாபகம் வரவில்லை.
*சர்வதேச தரத்திலான ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் அறிவியல் நகர் பகுதியில் நிர்மானிக்க திட்டம் தொடங்கப்பட்டது பின்பு அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது அதுவும் நிர்மானிக்கப்பட்டு இருந்தால் புகழ் பெற்ற மைதானமாக மாறியிருக்கும்
*ஒரு மரம் வெட்டினால் ஒரு மரம் நட வேண்டும் எனும் அறிவிப்பு எல்லா இடமும் காணப்படும்! காட்டுப் பாதைகளிலும் இந்த அறிவிப்பினை வைத்திருப்பார்கள். ஒட்டுசுட்டான் புதுக் குடியிருப்பு வீதியில் கூட ஆள் அரவமற்ற இடங்களிலும் இந்த அறிவிப்பினைப் பார்த்திருக்கிறேன்.
எம் இயற்கை வளங்களினைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினை அமைத்தார் தலைவர்.
இதுவும் வன்னியிலும் சரி, முன்னர் யாழ், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் இலங்கையின் ஏனைய வட கிழக்குப் பகுதியில் இயங்கிய காலத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தியது.
*போராளிகள் வெறுமனே களப் பணிகளில் மாத்திரம் இருக்கக் கூடாது, கல்வியிலும் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் அறிவியல் நகரில்
தூயவன் அரசறிவியற் கூடம்,
லெப் கேணல் நவம் அறிவுக் கூடம்,
துளசிராம் இலக்கிய வட்டம்,
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி கலையகம், எனப் பல கல்விக் கூடங்களைத் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.
*வன்னிக்குள் சுனாமி வந்த நேரம் தந்திரமாக வெளிநாட்டுடன் பேசி, காலநிலை, வானிலையினை அவதானிக்கும் நோக்குடன் இண்டெல்சாட் எனும் சாட்டிலைச் (satellite) சேவையினை வரவைத்தார்கள் புலிகள். பின்னர் அதன் மூலம் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்தினையும், வானிலை அவதானிப்பு நிலையத்தினையும் உருவாக்கினார்கள்.
அதன் பிறகு செய்மதியில் இயங்கக் கூடியதாகவும், அனைத்துலகினையும் சென்று சேரக் கூடியதாகவும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியினையும் உருவாக்கினார்கள்.
*தமிழ் மக்களுக்காக தமிழ் பேசும் மக்களால், போராளிக் கலைஞர்களால் நடாத்தப்படும் வானொலியினை உருவாக்கினார்கள். அது புலிகளின்குரல்.
*இலங்கையின் வரலாற்றில் மிகச் சிறந்த ஒளிப்பதிவுடனும், தொழில் நுட்பங்களுடனும் கூடிய படங்கள் வன்னியில் தான் வெளியாகியது.
இவற்றை வெளியிட்ட உரிமை, தமிழீழ திரைப்பட உருவாக்கற் பிரிவிற்கும், நிதர்சன நிறுவனத்தினருக்குமே சாரும்!
அதே போல ஒலிப் பதிவில் சிறந்த பாடல்களை உருவாக்கிய பெருமை தர்மேந்திராக் கலையகத்திற்கும், நிதர்சன நிறுவனத்திற்குமே சாரும்.
*தமிழீழ மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கல்விக் கழகத்தினை உருவாக்கினார்கள். அதன் பொறுப்பாளராக திரு.வே.இளங்குமரன் அவர்கள் இறுதிக் காலம் வரை விளங்கினார்கள்.
இதனூடாக வன்னியில் புலமைப் பரிசில். உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முன்னோடிப் பரீட்சைகளும், ஆண்டிறுதிப் பரீட்சைகளும் நிகழ்த்தப்பட்டன.
*இலங்கை வரலாற்றில் முதன் முதல் வெளி நாடுகளில் உள்ளது போன்று அளவுக்கு மீறிய ஸ்பீட்டில் ஓடும் வாகனங்களைப் பிடிப்பதற்கான கருவினையும், வேகத் தடைக் கண்காணிப்பினை நிகழ்த்திய பெருமையும் தமிழீழ காவல் துறையினையே சாரும்.
*இலங்கை அரசால் தமிழர் தம் வரலாறுகள் மறைக்கப்பட்டு, இளஞ் சந்ததிக்குப் பாட நூல்கள் ஊடாகத் திரிபுபடுத்தப்படுவதனை உணர்ந்த புலிகள் கல்விக் கழகம் ஊடாக 2000ம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் புத்தகங்களையும், ஏனைய சில பாட நூல்களையும் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்கள்.
*தரமான போக்குவரத்துச் சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கில்
தமீழ போக்குவரத்துச் சேவையினையும், போக்குவரத்து கண்காணிப்புச் சேவையினையும் உருவாக்கினார்.
*இறந்த போர் வீரர்களை என்றுமே எம் இதயத்தில் இருத்தி வைக்கும் நோக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை, கல்லறைகளை உருவாக்கினார்.
அதே போல மாவீரர் விபரங்களைத் திரட்டிட மாவீரர் பணிமனையினை உருவாக்கியிருந்தார்.
ஊர்கள் தோறும் சனசமூக நிலையம், நூலகம் ஆகியவை இல்லையே எனும் குறையினைப் போக்க மாவீரர் படிப்பகத்தினை உருவாக்கும் உத்தரவினை பிரபாகரன் வழங்கியிருந்தார்.
*கலைகளையும், இலக்கியங்களையும் வளர்க்கும் நோக்கில் தமிழீழ கலை பண்பாட்டுப் பிரிவினை உருவாக்கினார். மக்களுக்கும், புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஊர்கள் தோறும் அரசியற் துறை அலுவலகங்களை நிர்மாணித்திருந்தார்.
*பாலர் முன்பள்ளிகள், ஆதரவற்ற சிறுவர்களுக்கு அண்ணனாகவும், மாமனாகவும் தான் இருக்கிறேன் எனும் நோக்கில் அரவணைத்திட காந்தரூபன் அறிவுச் சோலை, செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றினை அமைத்திருந்தார்.
No comments:
Post a Comment