Saturday 27 June 2015

அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்

ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப்.



general-giap-21954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து வரும் வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, பியன்-தியன்-பு என்ற இடத்தில் தனது படைகளை குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றன பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகள். அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.


டெட் தாக்குதல்




ஆனால் அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் சென்ற வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்தோ சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு சவக் குழி வெட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை. பிரெஞ்சு படைகள் துரத்தி அடிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு தெற்கு வியட்நாம் அரசுக்கு ஆயுதங்கள் அளித்தும், நேரடியாக அமெரிக்கப் படைகளை அனுப்பியும், வியட்நாம் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தது. உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் யாராலும் எதிர் கொள்ள முடியாத அமெரிக்க அரசை, நெல் வயல்கள் நிறைந்த விவசாய நாடான பலவீனமான இராணுவம் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.

1968-ம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க தளங்கள் பலவற்றில் ஒரே நேரத்தில் வியட்நாம் மக்கள் இராணுவமும் தெற்கு வியட்நாமின் வியட்காங் போராளிகளும் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் படைகளின் எதிர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் உயிரிழந்தனர்.

இந்தப் போர் முழுவதிலும் அமெரிக்க ஆயுதங்களால் கொல்லப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை 25 லட்சம், வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 58,000. கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள்  மீது அவிழ்த்து விட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. போரை எதிர்த்து நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு அடி பணிந்தும், போரில் தோல்வி ஏற்பட்டதாலும் அமெரிக்கா வியட்நாமிலிருந்து விலகிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.


இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளகர்த்தராக பணியாற்றிய ஜெனரல் கியாப் 1911-ம் ஆண்டில் வியட்நாமின் விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களால் கைது செய்யப்பட்டார். பிறகு ஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக் கொண்டே வரலாற்று ஆசிரியராக பணி புரிந்தார். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்த போது ஹோ-சி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.

அவரது மனைவியும், தந்தையும், சகோதரியும் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு அரசால் சிறையிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கொரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜப்பானிய சரணடைவுக்குப் பிறகு 1946-ம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசு அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன.

ஆனால், வியட்நாம் மக்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் தனது காலனி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட வந்தது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது படை எடுத்தது.

பிரெஞ்சு படைகளுக்கு எதிரான தியன் பியன் பூ தாக்குதலிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான டெட் தாக்குதலிலும் வியட்நாம் மக்கள் படை எப்படி வெற்றி பெற முடிந்தது?

ஒரு பொருளாதார ரீதியில் பின்தங்கிய, பலவீனமான ராணுவத்தைக் கொண்ட நாட்டு மக்கள் தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் வலுப்படுத்தப்பட்ட நவீன இராணுவத்தை எதிர்த்து எப்படி தமது சுதந்திரத்தை மீட்க முடிந்தது?

வியட்நாம் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் கோட்பாட்டை வகுத்து நடைமுறைப்படுத்தி வியட்நாம் மக்களின் விடுதலைப் போரை வழி நடத்தினார் ஜெனரல் கியாப்.

மக்கள் யுத்தம்

யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.

எதிரியின் இராணுவ, பொருளாதார வலிமைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களை எதிர் கொண்டு தோற்கடிக்க அது போதாது. ஒரு நாட்டின் மக்கள் தமது சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டு போராடும் போது அவர்கள் எப்போதும் வெற்றியடைவது உறுதி.  உலகின் மிகப் பலமான பொருளாதார, இராணுவ சக்தி கூட தமது சர்வதேச உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களின் எதிர்ப்பை தகர்க்க முடியாது.

“அவ்வாறு ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் யுத்தம் இராணுவ, அரசியல், மற்றும் பொருளாதார தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்” என்றார் ஜெனரல் கியாப். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வியட்நாம் மக்களின் போர், நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தது.

“போரில் வெற்றி பெற்றவர்கள் வியட்நாம் மக்கள், அமெரிக்க இராணுவம்  தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்பினார்கள். அமெரிக்க மக்கள் போரை விரும்பினார்களா? இல்லை, அவர்களும் அமைதியை விரும்பினார்கள். எனவே எங்கள் வெற்றி வியட்நாம் மக்களின் வெற்றி, அமெரிக்காவில் அமைதியை விரும்பிய மக்களின் வெற்றி.” என்றார் ஜெனரல் கியாப்.

என்ன விலை கொடுத்தாவது வியட்நாமை ஆக்கிரமிக்கத் துடித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்தான் தோல்வி அடைந்தார்கள்.

உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராடி மண்டியிடச் செய்த தளபதி ஜெனரல் கியாப்புக்கு சிவப்பு வணக்கங்கள்.

No comments:

Post a Comment