Saturday 27 June 2015

ஈழம், கம்போடியா: இரண்டு இயக்கங்கள், ஒரு வரலாறு

விடுதலைப் புலிகள் அமைப்பில், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கருணா குழுவினரின் பிளவு, இறுதி யுத்தத்தில் அதனால் ஏற்பட்ட விளைவுகள், இவற்றை பல தமிழர்கள் விபரமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே மாதிரியான பிளவு, அதே மாதிரியான விளைவுகள், கம்போடியாவில் க்மெர் ரூஜ் இயக்கத்தினுள்ளும் நடந்துள்ளன என்பது அதிசயமல்லவா? சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வார்கள். ஒரு நாட்டில் நடந்த வரலாற்றுச் சம்பவங்கள், இன்னொரு நாட்டிலும் அதே போன்று நடக்க வாய்ப்புண்டு. இந்தக் காரணத்தால், நாங்கள் உலகின் பிற நாடுகளில் நடந்தவற்றையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "இன்னொரு நாட்டு மக்களின் பிரச்சினை எமக்குத் தேவையில்லை" என்ற மனநிலையில் பலர் இருக்கின்றனர். படித்தவர்களிடமும் காணப்படும் அத்தகைய  அறியாமை, சில நேரம் முழு சமூகத்தினதும் பின்னடைவுக்கு காரணமாகின்றது. ஆயிரம் மைல்களுக்கு அப்பால், கம்போடியா என்ற நாட்டில் நடந்த சரித்திர சம்பவங்கள், எமது நாட்டிலும் நடக்கலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஆனால், அது நடக்கிறது. 


க்மெர் ரூஜின் வீழ்ச்சிக்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கம்போடியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான பகையை புரிந்து கொள்வது அவசியம். க்மெர் மொழி பேசும் கம்போடிய மக்களுக்கு, தாய்லாந்து, வியட்நாம் இரண்டுமே பரம்பரை எதிரிகள் தான். பண்டைய கம்போடியாவின் மூன்றில் ஒரு பகுதியை, இவ்விரண்டு நாடுகளும் ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், இன்றைய க்மெர் மக்கள், தாய் (லாந்து) மக்களிடம் அதிகளவு வெறுப்பைக் காட்டுவதில்லை. ஆனால், வியட்நாமியர் மேல் அளவுகடந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர். சில நேரம், தாய் மக்களுக்கும், க்மெர் மக்களுக்கும் இடையிலான மொழி, கலாச்சார ஒற்றுமைகள் இனக் குரோதத்தை ஓரளவு தணித்திருக்கலாம். இப்பொழுதும், கம்போடியாவில் தாய்லாந்து திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் இரசிகர் பட்டாளம் இருக்கின்றது. ஆனால், வியட்நாமியர்கள் முற்றிலும் வேறுபட்ட மொழி பேசுவதும், வித்தியாசமான கலாச்சாரத்தை பேணுவதும், இனக்குரோதம் வளர்வதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஹிந்தி மொழி பேசும் வட நாட்டவருக்கும், தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு போன்றது என்று வைத்துக் கொள்வோம். 

பொல் பொட், மற்றும் க்மெர் ரூஜ் தலைவர்கள், வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு, தனியாக இயங்கத் தொடங்கியதை ஏற்கனவே பார்த்தோம். 1975 ல், க்மெர் ரூஜ் ஆட்சிக்கு வந்த பின்னர், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆயுதப்போராட்டம் நடந்த காலங்களில், இரு நாடுகளுக்கும் உதவிய சீனா மத்தியஸ்தம் வகித்தது. ஆனால், சர்வதேச சமூகத்தில் நடந்த மாற்றங்கள், சீனா-வியட்நாம்-கம்போடியா என்ற முக்கூட்டு உறவை பெரிதும் பாதித்தது. ஸ்டாலினுக்குப் பின்னர், சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இரண்டுமே போருக்குத் தயாரான பகை நாடுகள் போன்று காணப்பட்டன. சோவியத் யூனியன் ஒரு சமூக-ஏகாதிபத்தியம் என்று கூறி வந்த சீனா, அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது. அதே நேரம், வியட்நாம் சோவியத் யூனியனுடன் நெருக்கமானது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பொதுவான எல்லையில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. இதனால், சீனா கம்போடியாவை நிபந்தனை இன்றி ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

வியட்நாமுடன் மோதல் நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர், சர்வதேச நண்பர்களை தேட வேண்டும் என்று, சீனா க்மெர் ரூஜ் அரசுக்கு அறிவுரை கூறியது. அதன் பிறகு தான், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் கம்போடியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டனர். இந்தோனேசிய, தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு கம்போடியாவில் அடைக்கலமும், இராணுவ பயிற்சியும் வழங்கப் பட்டன. இவற்றின் மூலம், க்மெர் ரூஜுக்கு ஓரளவு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.  அதை எல்லாம், க்மெர் ரூஜ் சமாதான வழியில் செல்வதற்கான சமிக்ஞையாக வியட்நாம் புரிந்து கொண்டது. ஆனால், க்மெர் ரூஜ் தலைமை, வியட்நாமுடனான பகை முரண்பாட்டை நீறு பூத்த நெருப்பாக வைத்திருந்த விடயம், காலம் தாழ்த்தித் தான் தெரிய வந்தது. விரைவில், கம்போடியாவில் ஒரு சகோதர யுத்தம் நடக்கப் போகின்றது என்பதை அன்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

1976 ம் ஆண்டு, வட பகுதியில் உள்ள சியாம் ரீப் நகரில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சிலர் கொல்லப்பட்டனர், கட்டிடங்கள் சேதமுற்றன. அந்த அசம்பாவிதம் குறித்து இரண்டு வகையான தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. அமெரிக்க விமானங்கள் குண்டுவீசியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், இயக்கத்திற்குள் தலைமையுடன் முரண்பட்ட குழுவினரின் கிளர்ச்சி நடப்பதாக, வெளிநாடுகளில் க்மெர் ரூஜ் எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். வெளியார் யாரும் நுழைய முடியாத, க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடப்பது எதுவும் வெளியே தெரிய வருவதில்லை. இதனால், வதந்திகள் பரவுவதையும் தடுக்க முடியாது. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்  பிரதேசத்திற்குள் கிளர்ச்சிகள் நடந்ததாக, வெளிநாடுகளில் வாழ்ந்த புலி எதிர்ப்பாளர்கள் வதந்திகளை பரப்பி வந்தமை இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. வன்னியில் புலிகளின் நிலைகளை, சிறிலங்கா வான்படை விமானங்கள் தாக்கிய சம்பவங்கள் காரணமாக, இயக்கத்தில் பொறுப்பாக இருந்தவர்களும் சந்தேகிக்கப் பட்டதை மறுக்க முடியாது. 

குறிப்பாக, புலிகள் இயக்க பிரதித் தலைவர் மாத்தையாவின் துயரமான முடிவு, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. கிட்டுவின் ஆயுதக்கப்பல் பிடிபட்ட சம்பவத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில், பிரதித் தலைவர் மாத்தையா கைது செய்யப் பட்டிருந்தார். நீண்ட காலமாக, பிரத்தியேகமான சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். மாத்தையா ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். அதே மாதிரியான சம்பவங்கள், அன்றைய கம்போடியாவினுள்ளும் நடந்து கொண்டிருந்தன. சியாம் ரீப் குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில், வட பிராந்திய தளபதியும், வர்த்தக அமைச்சருமான துவோன் கைது செய்யப்பட்டார். 

புலிகள், மாத்தையா விவகாரத்தை, இயக்க உறுப்பினர்களுக்கே தெரிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்ததைப் போல, துவோன் கைது விவகாரமும் வெளியிடப்படவில்லை. வட பிராந்தியத் தளபதியாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். துவோன் கைதுக்குப் பின்னர், அவரின் விசுவாசிகள் கலகம் செய்யலாம் என்று, தலைமை அஞ்சியது. வட பிராந்தியத்தில் துவோன் விசுவாசிகள் என்று கருதப்பட்டவர்களின், ஆயுதங்கள் களையப்பட்டு, விசேட சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டனர். அவர்களின் இடத்தை, புதிய போராளிகள் நிரப்பினார்கள். ஈழத்தில் மாத்தையாவுக்கும், மாத்தையா விசுவாசிகளுக்கும் என்ன நடந்ததோ, அது கம்போடியாவில் துவோனுக்கும், துவோன் விசுவாசிகளுக்கும் நடந்தது. கதை ஒன்று, நாடுகள் தான் வேறு வேறு.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், கிழக்குப் பிராந்திய ஜெனரல் ஒருவரும், அவரது விசுவாசிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் விசேட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும், க்மெர் ரூஜ் இயக்கத் தலைவர்கள், போராளிகளாக இருந்தனர். அவர்களை எல்லாம் விசாரிப்பதற்கென தனியாக உருவாக்கப்பட்ட சிறைக்கு S -21 என்று பெயரிடப் பட்டது. ப்னோம் பெண் நகருக்கு தெற்கில் உள்ள,  துவோல் ஸ்லேங் என்ற இடத்தில் பயன்பாட்டில் இல்லாத பாடசாலை ஒன்று இதற்கென ஒதுக்கப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சர் சொன் சென்னின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்த தடுப்பு முகாம் இயங்கியது. அங்கே கொண்டு செல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்திரவதைக்கு ஆளானார்கள். சித்திரவதையின் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள், வேறிடத்திற்கு கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். 1979 ம் ஆண்டு, கம்போடியா மீது படையெடுத்த வியட்நாமிய  இராணுவம், அந்த சிறை முகாமை, க்மெர் ரூஜ் கால கொடுமைகளைக் காட்டும் அருங்காட்சியகமாக மாற்றி விட்டது. இன்று கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த இடத்தை சென்று பார்க்கத் தவறுவதில்லை. இன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில், "S -21 சித்திரவதைக் கூடம்" பற்றிய ஆவணப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.  

1976 ம் ஆண்டின் இறுதியில், சித்திரவதை முகாமில் வைத்து, சுக், நே சரண், சாக்ரி, கியோ மியஸ் போன்ற முக்கிய தலைவர்களும், நூற்றுக் கணக்கான முன்னாள் போராளிகளும், சதியில் ஈடுபட்டதகாக ஒத்துக் கொண்டனர்.  வியட்நாம் புலனாய்வுத் துறையின் உத்தரவின் படி, "கம்போடிய தொழிலாளர் கட்சி" என்ற புதிய கட்சியை உருவாக்குவதற்கு முயன்றதாக, பொல் பொட்டை கொலை செய்ய முயன்றதாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, வெளியில் யாராலும் ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. 

அதே நேரம், சித்திரவதையால் பெறப்பட்ட வாக்குமூலங்களை நம்பும் அளவிற்கு பொல் பொட் முட்டாளுமல்ல.  "குற்றம் சாட்டப்பட்டவர்கள், வியட்நாமுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்று கருதிய மிதவாதிகள். அப்படியான மிதவாதப் போக்கு கூட பொல் பொட்டை பொறுத்த வரையில் துரோகம்." என்று பெரும்பாலான கம்போடிய மக்கள் நம்புகின்றனர். ஈழப் போராட்டத்திலும் அதே மாதிரியான கதைகளை கேள்விப் பட்டிருப்போம். "புதிய கட்சி (விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி) ஒன்றை நடத்திய மிதவாதப் போக்கிற்காகவும்,  இந்திய புலனாய்வுத் துறையான ரோ வின் உத்தரவின் படி, பிரபாகரனை கொல்லத் திட்டமிட்டதற்காகவும்," மாத்தையா மீது புலிகள் இயக்கத்தினுள் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக கூறப் படுகின்றது. 

தமிழர்களுக்கும், க்மெர்களுக்கும் பொதுவான பழைமைவாதக் கலாச்சாரம் ஒன்றுண்டு. ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பழிவாங்கக் காத்திருப்பார்கள். இதனால், மாறி மாறி, சம்பந்தப் பட்ட குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப் படுவார்கள்.  பழிக்குப் பழி வாங்குவதற்காக, முழுக் குடும்பத்தையும் அழிக்கும் நாயகர்களை, வில்லன்களை எத்தனை தமிழ் சினிமாப் படங்களில் பார்த்திருப்பீர்கள்?   குழந்தை வளர்ந்து பெரியவனாகி பழிவாங்கி விடும் என்று, அதனையும் கொல்வார்கள். க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்திலும், அதெல்லாம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. 

சி.ஐ.ஏ.,கே.ஜி.பி.,வியட்நாமுக்காக உளவு பார்த்த குற்றச் சாட்டில், ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதே நேரம், அவர்களது பெற்றோர், சகோதரர்கள், மாமன், மச்சான், அவர்களது பிள்ளைகள் எல்லோரும் கொல்லப் பட்டனர். ஒரு குடும்ப உறுப்பினரை உயிரோடு விட்டு வைத்தால் கூட, அவன் நாளைக்கு பழிவாங்க வருவான் என்பது க்மெர் மக்களின் நம்பிக்கை. இலங்கையில், ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் அது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கேள்விப் படுகின்றோம். படையினர், ஜேவிபி உறுப்பினரின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த கதைகளும், பழிக்குப்பழியாக படையினரின் குடும்பங்களை ஜேவிபியினர் அழித்த கதைகளும், தென்னிலங்கையில் மலிந்து கிடக்கின்றன. 

1977 ம் ஆண்டு, துரோகிகள், சதிகாரர்கள் அனைவரையும் வெற்றிகரமாக களையெடுத்து விட்டதாக பொல் பொட் அறிவித்தார்.  புலிகளின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும், க்மெர் ரூஜின் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கும் இடையில் சில வித்தியாசங்களும் இருந்தன. புலிகள் இயக்கத்தை தவிர்ந்த, மாற்று இயக்க சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத பொழுது மட்டும், அவர்களது குடும்ப உறுப்பினர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தனர். ஒரு சிலர் பழிவாங்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே. பல உறவினர்கள், தாமாகவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். பலர் வெளிநாடுகளுக்கும், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் சென்றனர். 

கம்போடியாவிலும், க்மெர் ரூஜினால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வியட்நாமுக்கு தப்பி ஓடினார்கள். க்மெர் ரூஜ் காரர்கள்,  உளவாளிகளை களையெடுக்கும் விஷயம், அப்பொழுது தான் வியட்நாமுக்கு தெரிந்தது. ஆனால், வியட்நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அதை சாட்டாக வைத்து கம்போடியா மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியது. சோவியத் யூனியனுடன் இராணுவ ஒப்பந்தம் போட்டது.  ஆனால், 1978 வரையில் வியட்நாம் படையெடுப்பு பற்றி யோசித்திருக்கவில்லை. அநேகமாக, க்மெர் ரூஜ் இயக்கத்தினுள் ஒரு பெரும் உடைவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். அந்தக் காலமும் வந்தது. 

புலிகள் மாத்தையாவை கைது செய்த உடனேயே, வன்னியை சேர்ந்த மாத்தையா விசுவாசிகளையும் இலகுவாக அடக்க முடிந்தது. ஆனால், கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவை, அத்தனை இலகுவாக கையாள முடியவில்லை. கருணாவுக்கு எதிராக, கருணாவுக்கு கீழே கட்டுப்பட வேண்டிய கமாண்டர்களின் அணிகள் அனுப்பப் பட்டன. அவர்கள் கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்த போதிலும், கருணாவும், அவரது விசுவாசிகளும் சிறிலங்கா அரசிடம் தஞ்சம் புகுந்தனர். சிறிலங்கா படையினருடன் சேர்ந்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான படையெடுப்புகளில் பங்கெடுத்திருந்தனர். இது இவ்வளவும், கம்போடியாவிலும் நடந்துள்ளது! 

வியட்நாம் எல்லையோரமாக உள்ள கிழக்குப் பிராந்தியத் தளபதியின் பெயர் சோ பிம். மத்திய பகுதி கமாண்டர் கே பவுக், அவருக்கு கீழ்ப்படிய வேண்டிய கமாண்டர். "சோ பிம் துரோகியாகி, வியட்நாமின் கைக்கூலியாக செயற்படுவதாக", பொல் பொட்டுக்கு தகவல் கிடைத்தது. பொல் பொட்டின் உத்தரவின் பெயரில், கே பவுக்கிற்கு விசுவாசமான படையணிகள், கிழக்குப் பிராந்தியத்தை முற்றுகையிட்டன. சோ பிம்முக்கு விசுவாசமான நூற்றுக் கணக்கான போராளிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து, அவர்களது ஆயுதங்களை பறித்தார்கள். அந்தப் போராளிகள் அனைவரும், S -21 முகாமுக்கு அனுப்பப் பட்டு, பின்னர் கொல்லப் பட்டனர்.  அப்பொழுதும் சோ பிம், பொல் பொட் மீது நம்பிக்கை வைத்திருந்தார். பொல் பொட்டிடம் பேசுவதற்கென்று சென்ற வழியில், இன்னொரு படையணியால் வழிமறிக்கப் பட்டு கொல்லப் பட்டார். 

இருந்தாலும், கே பவுக்கின் படைகள், கிழக்குப் பிராந்தியத்தை அவ்வளவு இலகுவாக கட்டுப்படுத்த முடியவில்லை. கிழக்குப் பிராந்திய போராளிகள், க்மெர் ரூஜ் தலைமைக்கு கட்டுப் பட மறுத்தனர். ப்னோம் பென்னில் இருந்து அனுப்பப் பட்ட படைகளுக்கு எதிராக, சிறிது காலம் மறைந்திருந்து தாக்கினார்கள். ஆனால், விரைவிலேயே தமது பக்க பலவீனத்தை  உணர்ந்து, வியட்நாமுக்கு தப்பியோடினார்கள். வியட்நாமிடம் தஞ்சம் கோரிய முன்னாள் க்மெர் ரூஜ் போராளிகளை வைத்து, வியட்நாம் தனது நலன்களை பாதுகாக்கும் ஒட்டுக்குழுக்களை உருவாக்கியது. 1979 ம் ஆண்டு, வியட்நாமிய இராணுவம் படையெடுத்த பொழுது, க்மெர்  துணைப்படைகளும் சேர்ந்து கொண்டன.

வியட்நாமிய படையெடுப்பை எதிர்கொள்ள முடியாத க்மெர் ரூஜ் இயக்கம், காடுகளுக்குள் பதுங்கியது. அன்றைக்கு, துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு க்மெர் ரூஜில் இருந்து வெளியேற்றி, எதிரியிடம் சரணடைந்தவர்கள், இன்று கம்போடியாவை ஆட்சி செய்கின்றனர். அந்த "இனத் துரோகிகளை", இன்று உலகம் "ஜனநாயகவாதிகள்" என்று புகழ்கின்றது. கடைசி வரை, கம்போடிய மண்ணை விட்டுக் கொடாமல் போராடிய க்மெர் ரூஜ் போராளிகளை, இன்று உலகம் "இனப் படுகொலையாளர்கள்" என்று தூற்றுகின்றது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கம்போடியா மீது படையெடுத்து, இலட்சக் கணக்கான மக்களை படுகொலை செய்த வியட்நாமிய படையினரை, இன்று உலகம் "விடுதலை வீரர்கள்" என்று போற்றுகின்றது. இருபது வருடங்களில், உலகம் தலைகீழாக மாறி விட்டது!

No comments:

Post a Comment