ஒன்றுபட்ட ஜெரூசலேம் தனது தலைநகர் என்று இஸ்ரேல் கூறுகிறது. அரபு-இஸ்ரேல் போரில் 1967இல் கிழக்கு ஜெரூசலேமை தனது கட்டுப்பாட்டிற்கு இஸ்ரேல் கொண்டு வந்தது. எதிர்காலத்தில் உருவாக்கப்படும் தன்னுரிமைகொண்ட பாலத்தீன நாட்டின் தலைநகராக ஜெரூசலேம் இருக்கும் என்பது பாலத்தீனர்களின் வாதம்.
இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் புனித நகராக திகழும் ஜெரூசலேம் நகர் மட்டும் மிகவும் புராதனமானது அல்ல அதைப் பற்றிய சர்ச்சைகளும் பழமையானவையே.
இஸ்லாம், கிறித்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனித்ததலம் ஜெரூசலேம்.
இதனாலேயே பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஜெரூசலேமிற்கு உரிமை கொண்டாடுகின்றனர். 5,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ஜெரூசலேம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகி, முற்றுகையிடப்பட்டுள்ளது. தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த நகரின் மண்ணில் சரித்திரத்தின் சுவடுகள் பொதிந்துள்ளதாக கருதப்படுகிறது. உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றாக ஜெரூசலேம் கருதப்படுகிறது.
பல்வேறு மதங்களின் மக்களிடையே ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் மோதல் காரணமாக இன்று ஜெரூசலேம் உலக மக்களின் கவனத்தை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த நகரத்தின் வரலாறோ மக்களை ஒன்றிணைப்பது.
நகரின் மையப் பகுதியில் பழைய ஜெரூசலேம் என்று அழைக்கப்படும் புராதன நகரம் அமைந்திருக்கிறது. இது, உலகப் பாரம்பரியச் சொத்தாக (World Heritage) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு,
கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெரூசலேம்.
கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெரூசலேம்.
உலகின் மிக புனிதமாக கருதப்படும் இந்த நகரின் நான்கு குடியிருப்புகளும் கோட்டை போன்ற பாதுகாப்பு சுவரால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு பகுதிகள் கிறித்துவர்களுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அர்மீனியர்களும் கிறித்துவர்களே. நான்கு பகுதிகளிலும் மிகவும் பழமையானது அர்மீனியக் குடியிருப்பு பகுதிதான்.
மேலும், உலகின் மிகப் பழமையான அர்மீனிய மையம் இங்கிருக்கும் அவர்களது குடியிருப்பு பகுதியே. செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் மடாலயத்தில், ஆர்மீனியர்கள் தங்கள் வரலாறு மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.
கிறித்துவர்களின் பகுதியில் திருக்கல்லறை தேவாலயம் (The Church of the Holy Seppelker) அமைந்துள்ளது. இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை மையமாக கொண்டதாக நம்பப்படுவதால், உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்களின் நம்பிக்கைக்கு உரிய இடமாக இருக்கிறது. பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, இறந்தது, உயிருண்டு எழுந்தது அனைத்துமே ஜெரூசலேமில்தான்.
கிறித்துவ மரபுகளின்படி, இந்த இடம் கல்வாரி மலை என்று கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இங்குதான் இருக்கிறது. அவர் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்ததும் இங்கிருந்துதான் என்று நம்பப்படுகிறது. கிறித்துவ சமூகத்தினர், குறிப்பாக கிரேக்க பழமைவாத பேட்ரியார்ச்செட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பிரான்சிஸ்கன் ஃபிரையர்ஸ், ஆர்மீனிய பேட்ரியார்ச்சார்ட் போன்றவற்றை தவிர, எத்தியோப்பியன், காப்டிக் மற்றும் சிரியாவின் பழமைவாத தேவாலயங்கள் அதோடு தொடர்புடைய போதகர்கள் என இந்த தேவாலயம் கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான கிறித்துவர்களின் புனித மையம் இது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு வந்து பிரார்த்திப்பதும், பாவமன்னிப்பு பெறுவதும் கிறித்துவர்களுக்கு மனநிறைவு தருவதாக கருதப்படுகிறது.
மசூதியின் கதை என்ன?
ஜெரூசலேமின் நான்கு குடியிருப்புகளில் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி இஸ்லாமியர்களுடையதுதான். பாறைக் குவிமாடம் மற்றும் அல் அக்ஸா மசூதி இங்கு அமைந்துள்ளது.
ஹரம் அல் ஷரீஃப் (புனித இடம்) என்று அழைக்கப்படும் இடமும் ஜெரூசலேமில் அமைந்துள்ளது.
இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான இடங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் அல்-அக்ஸா மசூதி வக்ஃப் என்ற இஸ்லாமிய அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் மெக்காவில் இருந்து ஒரே இரவு பயணத்தில் இங்கு வந்ததாகவும், அவர் இங்கிருந்து தீர்க்கதரிசிகளின் ஆவிகளுடன் பேசியதாகவும் முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர்.
இதன் அருகிலேயே பாறைக் குவிமாடம் அமைந்துள்ளது. முகமது நபி ஜெரூசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்றதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் நாள்தோறும் இந்த புனித இடத்திற்கு வந்து தொழுகை நடத்துகின்றனர். ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாட்களில், இங்கு தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.
யூதர்களின் பகுதியில்தான், கோட்டை அல்லது மேற்கு சுவர் அமைந்துள்ளது. அல் அக்ஸா மசூதியின் சுற்றுமதிலின் ஒருபகுதியாக அமைந்திருக்கும் மேற்கு சுவர், சிதைந்துபோன நீண்ட சுவரின் எஞ்சியிருக்கும் பகுதியாகும். இந்த இடத்தில் யூதர்களின் புனித கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த புனித தலத்திற்குள் பரிசுத்தமான புனிதப் பகுதி (The Holy of the Holy) அல்லது யூதர்களின் மிகவும் புனிதமான இடம் அமைந்திருந்தது.
உலகமே இந்த இடத்தில் இருந்துதான் உருவானது என்றும், நபி இப்ராஹீம் தனது மகன் இஷாக்கை தியாகம் செய்யத் தயாராக இருந்த இடம் என்றும் யூதர்கள் நம்புகின்றனர். பரிசுத்தமான புனிதப் பகுதி (The Holy of the Holy) என்பதே பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்று யூதர்கள் நம்புகின்றனர்.
தற்போது மேற்கு சுவரின் அருகில் உள்ள பரிசுத்தமான புனிதப் பகுதியில் (The Holy of the Holy) யூதர்கள் வழிபாடு செய்கின்றனர். தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக கருதும் யூதர்கள் இங்கு ஆண்டுதோறும் வருகின்றனர் .
ஜெரூசலேமின் நிலைமையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வன்முறை மோதல்கள் வெடிக்கின்றன. புராதன நகரமான ஜெரூசலேம் தொடர்பாக பாலத்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே சர்ச்சைகள் தொடர்கதையாக நீள்கின்றன.
ஜெரூசலேமின் நிலைமையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வன்முறை மோதல்கள் வெடிக்கின்றன. இதனால் இங்கு நடைபெறும் சிறிய அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிரது.
இந்த புராதான நகரம், யூதர்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, அரசாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டதும், அந்நாட்டு நாடாளுமன்றம் நகரின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலேமை கைப்பற்றியது. புராதான நகரம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஜெரூசலேமின் மீதான இஸ்ரேலின் முழு இறையாண்மையும் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், இஸ்ரேலிய தலைவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை தங்கள் தலைநகர் என்று உரிமை கோருகின்றனர். இஸ்ரேல்-பாலத்தீன சர்ச்சையில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெரூசலேம் இரு நாடுகளின் தீர்வு என்றும் அறியப்படுகிறது. 1967-க்கு முன்னர் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் சுதந்திர பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது, அது ஐ.நா. தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெரூசலேம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாலத்தீன வழித்தோன்றல்கள். இவர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள யூத குடியேற்றப் பகுதி விரிவாக்கப்படுவதும் சர்ச்சைக்கு முக்கிய காரணம். இங்கு விரிவாக்கம் செய்வதும், கட்டுமானங்கள் கட்டப்படுவதும் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானவை. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கின்றது.
ஜெரூசலேமின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாகவே வரக்கூடும் என்று சர்வதேச சமூகம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
No comments:
Post a Comment