Sunday 29 November 2015

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
 
 
சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?
 
அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை “இனப்படுகொலை” என்ற வரையறைக்குள் அடக்கலாம். 
 
எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.
பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ – லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் “ஜனநாயகம்” என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.
 
பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.
 
ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
 
பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.
 
பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.
 
பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, “கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்” என்று நியாயப் படுத்தினார்கள்.
 
சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்” நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய “சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்” அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?
 
அது என்ன “சுதந்திரத்தின் சர்வாதிகாரம்”? இதைக் கேள்விப்படும் நீங்கள், “சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது” என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 
 
அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.
 
நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.
 
பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.
1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக “பொதுநல கமிட்டி” ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே “ஆளும் கட்சியாக” இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.
 
ஸ்டாலின் காலத்தில், “மக்கள் விரோதிகள்” என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் “துரோகிகள்” அல்லது “மக்கள் விரோதிகள்” என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.
 
“ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்…” என்பது ரொபெஸ்பியரின் வாதம். “நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்….” இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.
 
ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட “மக்களின் நண்பன்” (L’ Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: 
 
“துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!”

No comments:

Post a Comment