Saturday, 17 November 2018

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் !!!

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)





(பிறப்பு – அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார் இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. 

நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! 

கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.


நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். 




நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். 


வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!



”இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதைடாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ·பான் பிரௌன் [Wernher Von Braun].





அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார். பாரத நாட்டில் டாக்டர் ·பான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம். அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார். இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம். அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது! 1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார். உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார். 



அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார். 


பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார். அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன. முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence]. அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force]. இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது. முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.


அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது! தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை! கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார். 



அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி·பிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது. அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிரா·ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.


அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா·ப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார். அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார். சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார். பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..


SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார். 1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது. அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார். 


அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர். வீணை வாசிக்கிறார். ஸ்ரீராகத்தை ரசிக்கிறார். தமிழில் கவிதை புனைகிறார். தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார்.


விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர். அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.இந்தியாவைமுன்னேறிய நாடாக்கும்விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம்“ஏன் இங்கே செய்தியிதழ் ஊடகங்கள் இகழ்ச்சியாக எழுதி வருகின்றன? ஏன் இந்தியாவில் நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம்? நாம் பெருமைப்பட வேண்டிய உன்னத நாட்டைச் சேர்ந்தவர்! 


பிரமிக்கத்தக்க பல்வேறு வெற்றிக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆனால் நாம் அவற்றை ஒப்புக்கொள்ள மறுக்கிறோமே. ஏன் ? மரணங்கள், பயங்கர மூர்க்கச் செயல்கள், நோய்கள், மனிதக் குற்றப்பாடுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாக அறிவித்து நமது மகத்தான வெற்றிச் சாதனைகள் அவற்றில் மூழ்கி விடுகின்றன.”“இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.


”“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். 


நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”இளைஞருக்குக் கூறியதுமுன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். 


வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!


தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

அம்பிகாபதி அமராவதி காதல்!!!

ரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு
முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள்.
இதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது மக்கா ! . இன்னும் சிலர் காதல் கடிதம் எழுதுவதற்கு சிந்திக்கிறேன் என்று சொல்லி பக்கத்தில் ஓசி வாங்கிய பேனாவை வாயில் வைத்து கடித்து கடித்து பேனாக் கொடுத்தவனை கொலைகாரனாக மாற்றியவர்களும் பலர் உண்டு. என்ன யோசிக்கிறீங்க ? உங்களைப் பற்றி எப்படி சரியா எழுதி இருக்கேனா ?.




இதில், இன்னும் சிலர் அவள் கொடுத்த முதல் கடிதம் என்று சொல்லி, சொல்லி அந்த கடிதத்தில் பல ஓட்டைகள் விழுந்த பின்னரும் விட்டுவிட்டாமல் ஒட்டுப் போட்டு பொக்கிஷமென பாதுகாத்து புதிதாய் வந்த மனைவியிடம் மாட்டி நிறைய வாங்கி கட்டிக் கொண்டவர்களும் உண்டு. .. வானம், மானம், கானம், பூமி, காமி, குலம் குப்பை என இப்படி உருண்டு பிரண்டு பெரியகவிஞர் போல் கவிதை எழுதி இறுதியாக முகவரி எழுதாமல் தபால் பெட்டியை நிரப்பியவர்களும் உண்டு  .

துபோன்று காதலிப்பதற்காக ஏதேனும் ஒரு முயற்சி தினம் தினம் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கிறது. இதில் காதலில் சதியால் தோற்றவர்களும் உண்டு,காதலில் மதியால் வென்றவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் காதலை ரோஜா மலர்போல் மென்மையாக ரசிப்பபவர்களாகட்டும் அல்லது காதலை வேற்றுக்கிரக வாசியாகப் பார்ப்பதுபோல் பார்த்து முறைப்பவர்களாகட்டும். இங்கு அனைவருக்குமே உண்மையான காதல் என்றால் உதாரணமாக உச்சரிக்கும் காதல் ஜோடிகளில் அம்பிகாபதி அமராவதி. காதலும் ஒன்று. சரி அப்படி என்னதான் இவர்கள் காதலுக்காக செய்தார்கள் எதற்க்காக எல்லோரும் உண்மையான காதலுக்கு உதாரணமாக இவர்களை சொல்கிறார்கள் என்று கேட்டால் எத்தனை பேருக்கு இவர்களின் காதல் கதை தெரியும் என்று தெரியவில்லை. அப்படி என்னதான் இவர்கள் காதலில் நடந்தது என்று நாமும் பார்த்துவிடுவோமே…??!! என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு .

னி விஷயத்திற்கு வருவோம். ஒன்பதாம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்று கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் என்று நாம் அனைவராலும் புகழப்படும் கவி சக்கரவர்த்தி கம்பன் பெருமான். இவரின் மகன்தான் இன்று காதலுக்கு உதாரணமாக அனைவரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அம்பிகாபதி. இவர் வாழ்ந்த காலத்தில் ஆட்சியில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த மன்னன் குலோத்துங்கச் சோழனின் குடும்பத்து இளவரசிதான் இந்த அமராவதி.இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்று நீங்கள் கேட்க நினைப்பது  புரிகிறது.

ந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது இருவரும் மிகவும் காதலில் மூழ்கிப்போனது கம்பனுக்கு தெரிய வந்ததாம் .

வர்களின் காதல் விவகாரம் மன்னனின் காதுக்கும் எட்டியதாம் மிகுந்த கோபம் கொண்ட மன்னன் அம்பிகாவதியை சிறை பிடிக்க உத்திரவிட்டாராம். ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள்,
சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச்  செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது.

பையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம் . அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்களாம்.


ந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அமராவதி பிழையாக ஒரு மலரைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறைவாகவே பாடி நிறுத்திவிட்டாராம்.

100  பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற
எண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி ஓடிவர அவளின் அழகில் மயங்கி சற்றே ”பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே” என காமரசம் ததும்பும் பாடலொன்றைக் பாடிவிட்டாராம். இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் பாடல் கடவுள் வாழ்த்து ஆதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள்.ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதித்தான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறந்துபோனாலாம்

ந்த உண்மையான காதலுக்காகத்தான் நாம் அனைவரும் அவர்களை காதலின் சிகரங்களாக இன்றும் நம் இதயங்களில் வைத்திருக்கிறோம் .

லினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.

உலகம் முழுவதும் இன்று விண்டோஸை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும் லினக்ஸ் என்ற ஒன்றையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். லினக்ஸ் ஆரம்ப காலத்தில், தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது.




பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான்.

லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.


 

01. லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம். எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை.

02. எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.

03. உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர் பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.

04. லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது.

05. லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

06. பல லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன

07. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த GNOME and KDE என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்

08. டோர்வால்ஸ் முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன.

09. லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.

10. ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும். இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.

Thursday, 16 August 2018

போற்றத்தக்க ஒரு தலைவர்.. வாஜ்பாய்!

மறைந்து விட்டார் வாஜ்பாய்... கடந்த ஒன்பது வாரங்களாக டில்லியின் அகில இந்திய மருத்துவ கழக மருத்துவ மனையில் (All India Institute of Medical Sciences or AIIMS) சிகிச்சை பெற்று வந்தார் வாஜ்பாய். கடந்த ஜூன் 11, 2018 முதல் AIMS மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், வயோதிகத்தின் காரணமாக வரும் பிரச்சனைகள் காரணமாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


வாஜ்பாய்க்கு 2001 ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 2009 ல் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே வாஜ்பாயின் இரண்டு சிறு நீரகங்களில் ஒன்று மட்டும் தான் செயற்பட்டு வந்திருக்கிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஞாபக மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டிருந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.


40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.

1999 – 2004 ஆட்சியில் 24 கட்சிகளை வைத்து நாட்டை ஆண்டவர் வாஜ்பாய். இது ஒரு மிகப் பெரும் சாதனைதான். இதற்கு முக்கிய காரணம், எல்லோரையும் அரவணைத்து செல்லும் வல்லமை, ஆங்கிலத்தில் சொன்னால் Inclusiveness, வாஜ்பாய்க்கு இருந்தது. ஆனால் என்னதான் இந்த Inclusiveness வாஜ்பாய் க்கு இருந்தாலும், அவர் ஒரு ஆர்எஸ்எஸ் காரர்தான். இதனை வாஜ்பேய் ஒரு கட்டத்தில், 2003 ல் இப்படி சொன்னார்; “Sangh (RSS) is my soul) அதாவது ஆர்எஸ்எஸ் தான் என்னுடைய ஆன்மா.


பிரதமர் இந்திரா காந்தி 1975 – 1977 காலகட்டத்தில் வாஜ்பாயை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். 1977 தேர்தலில் வென்று மந்திரி ஆனார். ஆனால் தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு இந்திரா காந்தி மீது எந்த கோபமும் இல்லை. 1980 ஜூன் 23 ல் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த போது, அந்த செய்தி அறிந்த அடுத்த பத்து நிமிடத்தில் வாஜ்பாய் இந்திரா காந்தி யின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார்.


மூன்று முறை பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பாய். 1996ல் வெறும் 13 ம் நாட்கள் மட்டும் பிரதமராக இருந்தார். பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்த காரணத்தால், வாக்கெடுப்புக்கு போகாமலேயே அவரே ராஜினாமா செய்து விட்டு சென்றார். இரண்டாவது தடவை 14 மாதங்கள், பிப்ரவரி, 1998 முதல் ஏப்ரல் 17, 1999 வரையில் பிரதமராக இருந்தார். பின்னர், 1999 செப்டம்பர் முதல் மே, 2004 வரையில் பிரதமராக இருந்தார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் 2002 மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்தன. அப்போது மோடி குஜராத்தின் முதலமைச்சர். நேரில் சென்று குஜராத் நிலவரத்தை பார்த்த பின்னர் வாஜ்பாய் சொன்ன கருத்து, குஜராத்தை ஆள்பவர்களுக்கு (மோடி) ராஜதர்மா வேண்டும் என்பதுதான். '’இந்த படுகொலைகளுக்கு பிறகு நான் எந்த முகத்துடன் வெளி நாடுகளுக்கு செல்லுவேன்’’ என்று வெளிப்படையாகவே வாஜ்பாய் ஒரு முறை கூறினார்.

வாஜ்பாய் மென்மையானவர், மோடி கடினமானவர் என்றெல்லாம் ஒரு கால கட்டத்தில் விமர்சனங்கள் வந்தபோது, பாஜக வில் இருந்து பின்னர் ஓரங்கட்டப்பட்ட கோவிந்தாச்சரியா சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தை, '’வாஜ்பாய் ஆர்எஸ்எஸி ன் முகோடா’’ '’முகோடா’’ என்ற ஹிந்தி வார்த்தையின் பொருள் 'முகமூடி’. அதாவது தாய் ஸ்தாபனம், தனக்கு தோதான நேரங்களில் மென்மையான வாஜ்பாயை பயன்படுத்தும், கடினமான நேரங்களில் மோடியை பயன்படுத்தும். இந்த இடத்தில் மோடியின் '’கல்யாண’ குணங்களை’’ எவரும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாஜ்பாய் நல்லவர். ஆனால் அவர் சார்ந்திருக்கும் பாஜக தான் அபாயகரமான கட்சி என்று இந்தியா வின் பெரும்பாலான பிராந்திய கட்சிகள் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் “Right man in the wrong party” என்று சொல்லுவார்கள். இதற்கு வாஜ்பாய் அழகாக ஒரு பதிலடி கொடுத்தார். '’ஒரு பழம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பழத்தை கொடுத்த மரம் தவறானதாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதெப்படி சாத்தியமாகும்?’’.

இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த வாஜ்பாய் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூருக்கு அவர் பஸ் பயணம் மேற்கொண்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் கார்கில் யுத்தம் வெடித்தது. இருந்த போதிலும் அவர் பிரதமராக இருந்த காலம் முழுவதும் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த அவர் பெரு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். லாகூர் பஸ் பயணம் பாகிஸ்தானில் நூழைந்த போது வாஜ்பாய் சொன்னார்; '’என் பக்கத்து வீட்டுக்காரர் சந்தஷோமாக, நிம்மதியாக இல்லை என்றால் நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்’’. இதனை விட பேருண்மை வேறென்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை.
 வாஜ்பாய் என்றும் போற்றத் தகுந்த ஒரு தலைவர்தான். வாஜ்பாய் நலம் பெற்று மீண்டும் அவர் வீடு திரும்ப வேண்டும் என்று இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் விரும்பியது. ஆனால் அது ஈடேறவில்லை.

Sunday, 18 March 2018

வரலாற்று நாயகர் : மகா அலெக்சாந்தர்

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார்.



கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.


கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.


மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.


அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. 

இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.


அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.


டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.


ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.

இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.


பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.


அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.


அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால், அலெக்சாந்தரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.


அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.

அதே சமயத்தில், அலெக்சாந்தர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையைப் பொன்னேபோல் போற்றினார். கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்கச் சிந்தனையாளர்களைவிட அதிகப் பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்குப் பெரிதும் காரணமாகும்.


அலெக்சாந்தர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார்.

நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரைப் போன்று, அலெக்சாந்தர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச் செல்வாக்கு அவர்களுடையதைவிடக் குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக் குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்குச் சென்றது.

அலெக்சாந்தரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாந்தரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பு, உடனடியாகவும், ஈரான், மெசொப்பொட் டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப் பண்பாடு விரைவாகப் பரவியது. அலெக்சாந்தருக்கு முன்பு, இந்த மண்டலங்களில் கிரேக்கப் பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாந்தர் பரப்பினார். பண்பாட்டுச் செல்வாக்கு என்பத எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாந்தர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்துப் பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமயக் கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின. பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச் செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப் பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது.

அலெக்சாந்தர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டுக் கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹீராத், கந்தஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின.

ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாந்தர், நெப்போலியன், இட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாந்தரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாந்தரின் செல்வாக்கைவிட மிகக் குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாந்தர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம் பெற்றிருக்கிறார்.