Saturday, 17 November 2018

லினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.

உலகம் முழுவதும் இன்று விண்டோஸை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும் லினக்ஸ் என்ற ஒன்றையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். லினக்ஸ் ஆரம்ப காலத்தில், தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது.




பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான்.

லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.


 

01. லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம். எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை.

02. எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.

03. உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர் பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.

04. லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது.

05. லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

06. பல லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன

07. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த GNOME and KDE என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்

08. டோர்வால்ஸ் முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன.

09. லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.

10. ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும். இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.

No comments:

Post a Comment