Thursday 1 September 2016

விண்டோஸ் 10 முதலாண்டு மேம்படுத்தல்

விண்டோஸ் 10 இயக்க முறைமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இனி இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியாது. கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும். இந்த நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பல வகை வசதி மேம்படுத்தலை, ஆகஸ்ட் 2 அன்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கிக் கொள்பவர்களுக்கு இது எளிதாகக் கிடைத்து. பலவகை மாற்றங்களையும், புதிய வசதிகளையும் இந்த முதலாண்டு அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

இந்த புதிய மேம்படுத்தல் தொகுப்பு “பதிப்பு 1607 (Version 1607) என அழைக்கப்படுகிறது. இந்த மேம்படுத்தலை உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள, Settings > Updates & Security > Windows Update என்று செல்லவும். இந்த திரையில், Check for Updates என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருந்தாலே இது முடியும். இதில் கிளிக் செய்தவுடன், சில நிமிடங்கள் சோதனை செய்யப்பட்டு, Feature update to Windows 10, version 1607 என்று காட்டப்படும். Update என்பதில் கிளிக் செய்தால், உடனே, அதற்கான கோப்புகள் அனைத்தும் மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தரவிறக்கம் செய்யப்படும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், கம்ப்யூட்டருக்கு வரும் மின்சக்தி தடைப்படக் கூடாது. லேப்டாப் கம்ப்யூட்டர் எனில், பேட்டரியில் போதுமான மின்சக்தி இருக்க வேண்டும். மின் இணைப்பில் இருப்பதுவும் நல்லது.

பைல்கள் தரவிறக்கம் செய்யப்படுகையில், எத்தனை சதவீத பைல்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்துள்ளன என்ற சதவீதம் காட்டப்படும். அனைத்தும் கம்ப்யூட்டரை வந்தடைந்தவுடன், அவற்றை உடனே இன்ஸ்டால் செய்திடவா என்று கேட்கும். சில மணித்துளிகள் ஆகும் என்பதால், அதற்கு உங்களுக்கு நேரம் இருப்பதை உறுதி செய்து கொண்டு, இன்ஸ்டால் செய்திட ஒப்புதல் கொடுக்கவும். இப்போதும், இணைய இணைப்பு மற்றும் தீராத மின்சக்தியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
படிப்படியாக அனைத்து அப்டேட் பைல்களும் இன்ஸ்டால் செய்யப்படும். இடையே, பலமுறை கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படலாம். இறுதியாக, அனைத்தும் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், உடனே ரீஸ்டார்ட் செய்திடவா? அல்லது வேறு ஒரு நேரத்தில் ரீஸ்டார்ட் செய்திடவா? என்று கேள்வி கேட்கப்படும். உடனே, ரீஸ்டார்ட் செய்து, அப்டேட் வேலையை உடனே முடிப்பதுதான் நல்லது. 


இதற்கு இசைவு தெரிவித்தவுடன், கம்ப்யூட்டர் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டதால், அனைத்தும் வடிவமைக்கப்படும். எந்த அளவு மீண்டும் வடிவமைக்கப்பட்டது என்று காட்டப்படும். முழுமையாக வடிவமைக்கப்பட்டவுடன், கம்ப்யூட்டர் மீண்டும் ரீஸ்டார்ட் செய்யப்பட்டு, புதிய விண்டோஸ் 10 திரை காட்டப்படும். ஸ்டார்ட் திரையில் சில தோற்ற மாற்றங்களைக் காணலாம். முன்பு காட்டப்பட்டது போல் இல்லாமல்,இடது பக்கம் புதியதாக ஒரு பிரிவு காட்டப்படும். இதில் Presently Added என்ற தலைப்பில், அண்மையில் இணைக்கப்பட்ட புரோகிராம்கள் காட்டப்படும். அதனை அடுத்து, கீழாக, அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் செயலிகளின் பட்டியல், Most Used என்ற பிரிவின் கீழ் இருக்கும். அதற்கும் கீழாக அனைத்து புரோகிராம்களும், அகர வரிசைப் பட்டியல் படி வரிசையாக இருக்கும். வலது புறம் உள்ள பிரிவில், அனைத்து செயலிகளுக்குமான டைல்ஸ்கள் இருக்கும். இதிலும், Life at a Glance மற்றும் Play and Explore என்ற இரு பிரிவுகளில் டைல்ஸ்கள் காட்டப்படும். 
இந்த மேம்படுத்தலில், கூடுதல் வசதிகளாகத் தரப்பட்டவை பின்வருமாறு:




விரும்பும் வண்ணங்களைப் பூசலாம்:

 விண்டோஸ் 10, அறிமுகம் ஆன போது, “hidden dark theme“ என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதன் மூலம் எட்ஜ் பிரவுசருக்கான 'தீம் செட்டிங்ஸ்' என்ற ஒன்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். தற்போது இந்த வண்ண மாற்றத்தினை எந்த செயலிக்குமாக மாற்றி அமைக்கலாம். இதற்கு Settings > Personalization > Colors என்று சென்று, அதில் தரப்பட்டுள்ள நிலைகளின்படி வண்ணத்தை பல்வேறு திரைக் காட்சிகளில் இயங்கும் செயலிகளில் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, “Show color on title bar” என்ற ஆப்ஷன் மூலம் விண்டோ டைட்டில் பார்களுக்கு, நீங்கள் விரும்பும் வண்ணத்தினை அமைக்கலாம். அதே நேரத்தில், ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார் மற்றும் ஆக் ஷன் சென்டர் ஆகியவை கருப்பு பின்னணியிலேயே இயங்கும்.



எக்ஸ்டன்ஷன் ஏற்றுக் கொள்ளும் எட்ஜ் பிரவுசர்: 

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் அறிமுகமானபோது, அது எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளாதவகையிலேயே நமக்குக் கிடைத்தது. இதனால், பல புதிய வசதிகள் கிடைக்காததால், எட்ஜ் பிரவுசரைப் பல வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாமல், மாறா நிலையில் வேறு பிரவுசர்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த குறை இப்போது நீக்கப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் பாணியிலேயே எக்ஸ்டன்ஷன் பிரவுசர்கள் எட்ஜ் பிரவுசருக்குக் கிடைக்கின்றன. எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு, மைக்ரோசாப்ட் டூல் ஒன்றை வழங்கியுள்ளது. இதன் மூலம், குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களாக மாற்றலாம். பின்னர் அவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த விண்டோஸ் ஸ்டோரில் அப்லோட் செய்திடலாம். இதனை வழங்கும் தொடக்க நிலையில், Adblock, Adblock Plus, Amazon Assistant, Evernote Web Clipper, LastPass, Mouse Gestures, Office Online, OneNote Web Clipper, Page Analyzer, Pin It Button (for Pinterest), Reddit Enhancement Suite, Save to Pocket, மற்றும் Translate ஆகிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, ஸ்டோரில் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது.



எட்ஜ் பிரவுசரில் கூடுதல் வசதிகள்:

ப்ளாஷ் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், அந்த ப்ளக் இன் செயலியை இயக்கும் முடிவை எட்ஜ் பிரவுசர் நமக்கே விட்டுவிடுகிறது. எனவே, ஏதேனும் ஓர் இணைய பக்கத்தில், ப்ளாஷ் இணைந்த படம் இருந்தால், அது இயக்கப்படாமல் வைக்கப்பட்டு, அதனை இயக்கும் முடிவு பயனாளரிடம் விடப்படும். இது குரோம் பிரவுசரில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது எட்ஜ் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. 



டேப்களை 'பின்' செய்திடும் வசதி:


நீங்கள் விரும்பும் மற்றும் அடிக்கடி திறந்து பார்த்து செயல்படவிரும்பும், இணைய தளங்களை, 'பின்' செய்திடலாம். குறிப்பிட்ட டேப்பில், ரைட் கிளிக் அல்லது தொடர்ந்து சிறிது நேரம் அழுத்தினால், அந்த டேப் சிறிய ஐகானாக மாறி, டேப் பாரின் இடது புற ஓரத்தில் (படத்தைப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக ஜிமெயில் அமைக்கப்பட்டுள்ளது) அமர்ந்து கொள்ளும். அடுத்து எப்போது எட்ஜ் பிரவுசரைத் திறந்தாலும், இந்த ஐகான் தெரியும். அதில் கிளிக் செய்து அப்பக்கத்தினைப் பெறலாம்.


அனுமதிக்கப்படும் அறிவுப்புகள்: 

இணையதளங்கள் தங்கள் அறிவிப்புகளை வழங்க மைக்ரோசாப்ட் அனுமதி அளித்துள்ளது. நீங்கள் இணைய தளம் ஒன்றைப் பார்க்ைகயில், அது, அறிவிப்புகள் என்னும் நோட்டிபிகேஷன்களை அனுமதிக்கிறீர்களா? என்று கேட்கும். இசைவு தெரிவித்தால், அந்த தளம் தன் அறிவிப்புகளை உங்களுக்கு வழங்கும். அவை உங்கள் சிஸ்டத்தின் Action Centreல் இருக்கும். அந்த நோட்டிபிகேஷனில் கிளிக் செய்தால், நீங்கள் அந்த இணையப் பக்கத்திற்கே அழைத்துச் செல்லப்படுவீர்கள்.



முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல: 

உங்களிடம் தொடு உணர் திரை கொண்ட கணினி இருந்தால், எட்ஜ் பிரவுசரில், பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்திற்கு முன்னரும் அடுத்தும் பார்த்த தளங்களைப் பார்க்க, இடது வலதாக ஸ்வைப் செய்தால் போதும். அம்புக் குறிகளைத் தேடி கிளிக் செய்திட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மேம்பாட்டு கோப்பில், எட்ஜ் பிரவுசரில், மைக்ரோசாப்ட் பல புதிய வசதிகளைத் தந்துள்ளது. மேலும் தருவதற்கு உறுதி அளித்துள்ளது.



விண்டோஸ் டிபண்டர் தரும் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு:

முன்பு, நம் கம்ப்யூட்டரில் தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் செயலி ஒன்றை நிறுவி இருந்தால் விண்டோஸ் டிபண்டர் தானாகவே தன் செயல்பாட்டினை நிறுத்திக் கொள்ளும். இந்த மேம்படுத்தலில், விண்டோஸ் டிபண்டர் செயலிக்கு “Limited Periodic Scanning” என்னும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. தானாகவே இயங்கி, கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு ஒன்றைத் தருகிறது. இதனை இயக்க, Settings > Update & Security > Windows Defender என்று சென்று “Limited Periodic Scanning” என்பதனை இயக்கி அமைக்கவும். 



அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஸ்கைப் செயலி:

விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்களுடன், “Skype for Windows” மற்றும் “Skype for Windows desktop” எனத் தனித்தனியே செயலிகளை, மைக்ரோசாப்ட் வழங்கியது. ஆனால், விண்டோஸ் 10 தரப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன், மைக்ரோசாப்ட் அதனைத் திரும்பப் பெற்றது. விண்டோஸ் 10 Get Skype என்னும் அப்ளிகேஷனுடன் தரப்பட்டது. நவம்பர் மாதத்தில் அப்டேட் செய்திடுகையில், மெசேஜ், போன் மற்றும் விடியோ செயல்பட சோதனை முறையில் தனித்தனி அப்ளிகேஷன்கள் தரப்பட்டன. தற்போது, மைக்ரோசாப்ட் இந்த தனித்தனி அப்ளிகேஷன்களைத் திரும்பப் பெற்று, அனைத்து சாதனங்களிலும் ஒருங்கிணைந்து இயங்கும் வகையில், ஸ்கைப் செயலியை மாற்றியுள்ளது. போனில் இயங்கும் ஸ்கைப் வழியாகவும் உங்கள் ஸ்கைப் செய்திகள் மற்றும் அழைப்புகளை, டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும், லேப்டாப் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இது ஸ்கைப் செயலியில் தரப்பட்டுள்ள “messaging everywhere“ என்ற டூல் மூலம் சாத்தியமாகிறது.



விண்டோஸ் 10 ரீ இன்ஸ்டலேஷன்: 

விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மீண்டும் புதியதாகப் பதிக்க விரும்பினால், Settings > Update & Security > Recover என்று செல்லுங்கள். இது உங்களை மைக்ரோசாப்ட் Answers Forum என்னும் இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லும். இங்கு டூல் ஒன்றை தரவிறக்கம் செய்து, அதன் மூலம் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மீண்டும் பதிந்து கொள்ளலாம். இதில் என்ன சிறப்பு என்றால், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனம், தேவையில்லாமல் பதிந்து கொடுத்த புரோகிராம்கள் இதில் இருக்காது.



மாற்றி அமைக்கப்பட்ட 'ஸ்டார்ட்' மெனு:

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் 'ஸ்டார்ட் மெனு' தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த “All Apps” ஆப்ஷன் இப்போது இல்லை. ஸ்டார்ட் மெனுவின் இடது பக்கத்தில், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து செயலிகளும் காட்டப்படுகின்றன. இடதுபுறமாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளும், அண்மையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளும் காட்டப்படுகின்றன. அடுத்தடுத்து, புதிய செயலிகளை பதிவு செய்கையில், அவை இந்தப் பட்டியலில் காட்டப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு இணைக்கப்படும். இல்லையேல், அதிகபட்சமாக மூன்று செயலிகள் மட்டுமே காட்டப்படும்.

File Explorer, Settings, மற்றும் Shut Down ஆகிய மிக முக்கியமான, அடிக்கடி தேவைப்படும் பட்டன்கள் இடது புறமாகத் தனியே தரப்பட்டுள்ளன.  நீங்கள் ஒன் ட்ரைவ் பயன்படுத்துபவராக இருந்தால், இப்போது உங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி தரும் வசதி ஒன்றைப் பார்க்கலாம். இனி நீங்கள் பைல்களைத் தேடி, அவற்றின் முழு அல்லது பாதி பெயர்களைத் தேடல் கட்டத்தில் இடுகையில், அந்த பைல், கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, ஒன் ட்ரைவிலும் உள்ளதா எனத் தேடப்படும்.



டாஸ்க் வியூவில் முன்னேற்றம்:

 விண்டோஸ் 10 சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் விண்டோக்களை உருவாக்கிச் செயல்படும் வாய்ப்பினைத் தந்துள்ளது. இந்த விண்டோக்களைத் தற்போது Task View interfaceல், 'பின்' செய்து வைக்கலாம். இதன் மூலம், ஒவ்வொரு விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோவிலும் அவை காட்டப்படும். இதனை செயல்படுத்த, விண்டோ ஒன்றை Task View interfaceல் ரைட் கிளிக் செய்து, “Show this window on all desktops” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது பின் செய்யப்படும். எடுத்துக் காட்டாக, மியூசிக் அல்லது மெசேஜ் விண்டோவினை நாம் அனைத்து விர்ச்சுவல் விண்டோவிலும் காட்டப்பட வேண்டும் என விரும்புவோம். அப்போது இந்த வசதி நமக்குக் கை கொடுக்கும். 

டச்பேட் இயக்கத்திலும் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் விண்டோ அமைக்கப்பட்டிருக்கையில், டச் பேடில் நான்கு விரல்களைக் குவித்து வைத்து, இடது வலதாக ஸ்வைப் செய்தால், டெஸ்க்டாப் விண்டோக்களுக்கிடையே செல்லலாம். இந்த செயல்பாடு “precision touchpad,” எனச் சான்றளிக்கப்பட்ட டச் பேட்களில் மட்டுமே செயல்படும். 



டாஸ்க் பாரில் கூடுதல் வசதிகள்:

இந்த அப்டேட், டாஸ்க் பாரை கூடுதலாகப் பல வேலைகள் மேற்கொள்ளும் இடமாக மாற்றியுள்ளது. இது நம் காலண்டர் செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டாஸ்க் பாரில் உள்ள கடிகாரத்தில், அப்போதைய நேரத்தில் கிளிக் செய்தால், உடனே, நம் காலண்டரில் பதிந்து வைத்துள்ள இன்றைய பணி அட்டவணையைக் காட்டுகிறது. + பட்டனைத் தட்டினால், உடனே காலண்டர் செயலி திறக்கப்பட்டு, புதியதாக ஏதேனும் பணியினைச் சேர்க்க வழி தருகிறது. இதில் உள்ள இசைக்கான பிரிவிலும் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

கம்ப்யூட்டரில் ஹெட்செட் ஒன்றை இணைத்துவிட்டால், நாம் எந்த ஸ்பீக்கரில் (கம்ப்யூட்டர் / ஹெட்செட்) கேட்க விரும்புகிறோம் என்று தேர்ந்தெடுக்க ஆப்ஷன் கிடைக்கிறது.  இப்போது டாஸ்க் பார் செட்டிங்ஸ் அமைப்பு, செட்டிங்ஸ் பிரிவிலேயே இணைக்கப்பட்டுள்ளது. எனவே, செட்டிங்ஸ் பக்கத்தில், Settings > Personalization > Taskbar என்று சென்று, டாஸ்க் பார் அமைப்பினை மாற்றி அமைக்கலாம். 



லாக் ஸ்கிரீன் மாற்றம்: 


லாக் ஸ்கிரீன் தோற்றத்தில் சில மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதுவரை நம்முடைய மின் அஞ்சல் முகவரி, நாம் லாக் இன் செய்திடுகையில் காட்டப்பட்டது. இந்த தனிநபர் தகவல் ஏன் காட்டப்பட வேண்டும் எனப் பல பயனாளர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பின்னூட்டம் தந்தனால், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கொண்டு லாக் இன் செய்தால், அந்த மின் அஞ்சல் முகவரியைக் காட்டாமல் இருக்க வசதி தரப்பட்டுள்ளது. Settings > Accounts > Sign-in options > Privacy என்ற பிரிவு சென்று, இதனை அமைக்கலாம். கம்ப்யூட்டரில் ஏதேனும் இசை சார்ந்த கோப்பு இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஒலியைக் குறைக்கவும், அதிகரிக்கவும், மீண்டும் ஸ்கிரீனைத் திறந்து செல்ல வேண்டியதில்லை. லாக் ஸ்கிரீனிலேயே, கீழாக அதற்கான கண்ட்ரோல் டூல்கள் தரப்பட்டுள்ளன. 


இதுவரை செட்டிங்ஸ்>சிஸ்டம் பிரிவில் இருந்த Battery Saver பிரிவின் பெயர் Battery என மாற்றப்பட்டுள்ளது. இதன் திரையில் விரிவான முறையில் பல விருப்பத் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செயலியும், பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? (“Always allow in background” / “Never allow in background,”) என்பதை இங்கு அமைக்கலாம். இவற்றுடன் தற்போது “Managed by Windows” என்னும் ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது. இதனைத் தேர்ந்தெடுத்தால், விண்டோஸ் சிஸ்டம் மிகத் திறமையாகச் செயல்பட்டு, சில செயலிகள் மிக அதிகமாக ராம் மெமரி, பேட்டரி திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தினால், அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். செயலிகளை நாம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அவை இயங்குவதை முற்றிலுமாக நிறுத்தி வைக்கும்.



வேலை மும்முரத்தில் அப்டேட் வேண்டாம்:

 விண்டோஸ் சிஸ்டம் தொடர்ந்து தானாக அப்டேட் செய்யப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனவே, கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருந்தால், பின்னணியில், அப்டேட் சோதனை செய்யப்பட்டு, அவை இன்ஸ்டால் செய்யப்படும். ஆனால், நாம் குறிப்பிட்ட நேரத்தில், அதிக வேலையை கம்ப்யூட்டரில் வழக்கமாக மேற்கொள்வதாக இருந்தால், அந்த நேரத்தைக் குறிப்பிட்டுவிட்டால், அந்த நேரத்தில், விண்டோஸ் தன் அப்டேட் வேலையை மேற்கொள்ளாது. இதனை செட் செய்திட, Settings > Update & Security > Windows Update என்று சென்று, நம்முடைய “active hours,” என்ன என்பதனை செட் செய்து வைக்கலாம். இதனால், நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ரீ ஸ்டார்ட் செய்திடும் வேலையெல்லாம் மேற்கொள்ளப்பட மாட்டாது. 



உணர்வு படங்கள் மாற்றம்: 

'எமோஜிஸ்' என அழைக்கப்படும் உணர்வுப் படங்கள் தற்போது முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன. முற்றிலுமாக, யூனிகோட் அமைப்பில் இவை அமைந்துள்ளன. எந்த வண்ணப் பின்னணியிலும் தெளிவாகத் தெரியும் வகையில் இவை மாற்றப்பட்டுள்ளன. இன்னும் பல மாற்றங்களை விண்டோஸ் 10க்கென, ஆகஸ்ட் 02ல் தரப்பட்டுள்ள அப்டேட் பைல் தந்துள்ளது. நாம் எளிதாக அடிக்கடி பயன்படுத்தக் கூடிய வசதிகள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன. கீழே சுருக்கமாகச் சில மாற்றங்கள் இங்கு தரப்படுகின்றன.

1. விண்டோஸ் கிராஷ் ஆகும் போது கிடைக்கும் “blue screen of death” திரையில், பிரச்னையை உடனடியாக உணர்ந்து கொள்ள QR Code ஒன்று தரப்படுகிறது. நம் ஸ்மார்ட் போன் மூலம் இதனை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
2. விண்டோஸ் 10 சிஸ்டத்தை இலவசமாகப் பெறுவதை “digital entitlement” என மைக்ரோசாப்ட் அழைத்தது. தற்போது அது “digital license” என அழைக்கப்படுகிறது. பின் நாளில் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் அமைப்பதாக இருந்தால் நமக்கு உதவியாய் இருக்கும்.
3. 'நோட்டிபிகேஷன் ஏரியா'வில் விண்டோஸ் டிபண்டர் செயலிக்கென தனியே ஐகான் தரப்பட்டுள்ளது. இதனைக் கிளிக் செய்து, அறிவிப்புகளையும் அதன் செயல்பாட்டினையும் அறியலாம்.
4. பைல் எக்ஸ்புளோரர் செயலிக்குப் புதிய ஐகான் தரப்பட்டுள்ளது. இது, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மற்ற ஐகான்களுடன் இணைவாக உள்ளது. 
5. என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டத்தில், 260 கேரக்டர்களுக்கு மேல் ஒரு பைலின் பெயரை அமைக்க இதுவரை முடியாது. தற்போது இது விலக்கப்பட்டுள்ளது. 
இவை தவிர பல விண்டோஸ் செயலிகளும், விண்டோஸ் ஸ்டோர் வழியாக மேம்படுத்தப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் உள்ள மாற்றங்களில் சில மட்டும் மேலே தரப்பட்டுள்ளன. மேலும் மாற்றங்கள் வருகையில், அவை குறித்த குறிப்புகள் தரப்படும்

No comments:

Post a Comment